கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசுக்கு வருகிறார்கள்
கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசுக்கு வருகிறார்கள் நாராயணசாமி வேதனை
புதுச்சேரி
ஆட்டோ கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசுக்கு வருகிறார்கள் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–
ஆட்டோ கட்டணம்அன்பழகன்: புதுவை பகுதியில் மட்டும் எத்தனை ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது? அரசால் அறிவிக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறதா?
அமைச்சர் ஷாஜகான்: புதுச்சேரி பகுதியில் மொத்தம் 2 ஆயிரத்து 687 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.35–ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18–ம் கட்டணம் வசூலிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்பழகன்: எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவதில்லை. அவர்கள் குறைந்தபட்சமே ரூ.100 கட்டணமாக வசூலிக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து ரூ.120 கட்டணம் கொடுத்து ரெயிலில் வருகிறவர்கள் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்கு ரூ.300 வழங்கவேண்டியுள்ளது. எந்த அதிகாரிகள் ஆட்டோக்களை கண்காணித்தார்கள்?
எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசுமுதல்–அமைச்சர் நாராயணசாமி: ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஆட்டோ தொழிற்சங்கங்கள், அதிகாரிகளை அழைத்து பேசி முடிவு செய்தோம். பொதுமக்களின் வசதிக்காக மினிபஸ்களையும் இயக்கி வருகிறோம். சென்னையில் இருந்து ரூ.55 செலவு செய்து ரெயிலில் வருபவர்கள் வீட்டிற்கு செல்ல ரூ.200 ஆட்டோ கட்டணமாக கொடுக்கவேண்டியுள்ளது.
ஆட்டோக்காரர்கள் மீது இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்கள் தான் சிபாரிசுக்காக வருகிறார்கள். இரவு நேரங்களில் 4, 5 மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பழகன்: அரசு உத்தரவை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை. ஆட்டோ சங்கங்களுக்காக சட்டத்தை வளைக்கக்கூடாது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் தவறுக்கு துணைபோகமாட்டோம். இதை கண்காணிக்க வேண்டிய போக்குவரத்துத் துறை, காவல்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? 2 சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை முறைப்படுத்த போவதாக கூறினீர்கள். ஆனால் என்ன நடந்தது? மிஷன் வீதியில் அவர்கள்தான் 2 சக்கர வாகனங்களை நிறுத்தி அடைத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.