தூத்துக்குடியில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் 62 பேர் கைதாகி, விடுதலை


தூத்துக்குடியில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் 62 பேர் கைதாகி, விடுதலை
x
தினத்தந்தி 15 Jun 2017 2:30 AM IST (Updated: 14 Jun 2017 5:25 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று தூத்துக்குடியில் சாலை மறியல்.

தூத்துக்குடி,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 62 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

சென்னையில், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே மாநகர தி.மு.க. சார்பில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

62 தி.மு.க.வினர் கைது

இந்த திடீர் சாலைமறியல் காரணமாக பழைய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மாநகர செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்பட 62 தி.மு.க.வினரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story