அரசு ஓட்டுனர் பயிற்சியாளர் வீடு புகுந்து நகைகள்– பணம் திருட்டு


அரசு ஓட்டுனர் பயிற்சியாளர் வீடு புகுந்து நகைகள்– பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Jun 2017 1:30 AM IST (Updated: 14 Jun 2017 6:05 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், அரசு ஓட்டுனர் பயிற்சியாளர் வீடு புகுந்து நகைகள், பணம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், அரசு ஓட்டுனர் பயிற்சியாளர் வீடு புகுந்து நகைகள், பணம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுனர் பயிற்சியாளர்

கோவில்பட்டி ராஜீவ் நகர் 3–வது தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனர் பயிற்சியாளராக உள்ளார். இவர், கடந்த 10–ந்தேதி குடும்பத்தினருடன் நெல்லையில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது சேகர், வீட்டின் கதவை பூட்டி விட்டு, சாவியை அருகில் மறைவாக வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

நகைகள்–பணம் திருட்டு

இதனை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் சேகர் குடும்பத்தினருடன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ திறந்து கிடந்ததையும், நகைகள்– பணம் திருடு போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகள்– பணத்தை திருடியவரை தேடி வருகிறார்.

போலீசார் கண்காணிப்பு

பெரும்பாலும் சேகர் குடும்பத்தினர், வெளியூர் செல்லும் போது வீட்டுச்சாவியை குறிப்பிட்ட மறைவான இடத்தில் வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த நபர் தான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பின்னணியில் சேகர் வீட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story