முத்தூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


முத்தூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 3:15 AM IST (Updated: 15 Jun 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்தூர்

முத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 டாஸ்மாக் கடைகள் மாநில நெடுஞ்சாலை ரோட்டோரத்தில் இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் முத்தூர் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாக புதிய டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதற்கு பதிலாக மேட்டுப்பாளையம் ஊராட்சி ராசாத்தாவலசு கிராமம் அமராவதிபாளையம் கூராளிகாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்த அமராவதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வரட்டுக்கரை, தென்னங்கரைப்பாளையம், செட்டியார்பாளையம், பாரதிபுரம் நாய்க்கர்காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டால் பள்ளி மாணவ–மாணவிகள், பெண்கள், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்றும், சாலை விபத்துக்களும் அதிக அளவில் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் என்றும் அந்தபகுதி பொதுமக்கள் கூறினார்கள்.

அதனால், இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கத்தலைவர் சுதர்சன் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் முத்தூர்– காங்கேயம் மெயின்ரோடு, வரட்டுக்கரை பஸ் நிறுத்தம் அருகே நேற்றுகாலை திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆல்பர்ட் (வெள்ளகோவில்), முருகேசன் (காங்கேயம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அத்துடன் காங்கேயம் டாஸ்மாக் மதுபான கிடங்கு மேலாளர் ராஜா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் போலீசாரும், அதிகாரிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்களின் எதிர்ப்பு பற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைதொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story