ஈரோடு மரப்பாலம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு மண் கொட்டவந்த 3 டிராக்டர்கள் சிறைபிடிப்பு
ஈரோடு மரப்பாலம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு மண் கொட்ட வந்த 3 டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை பிள்ளை வீதியில் 4½ ஏக்கர் பரப்பளவில் மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சியும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட், கால்பந்தும் விளையாடி வருகிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்காடைக்காக குழிகள் தோண்டப்பட்டு பின்னர் மூடும்போது மீதம் உள்ள மண்ணை டிராக்டர் மூலம் ஏற்றி வந்து கடந்த 1½ ஆண்டுகளாக இந்த மைதானத்தில் கொட்டி வந்துள்ளனர்.
3 டிராக்டர்கள் சிறைபிடிப்புஇந்த நிலையில் நேற்று மதியம் 3 டிராக்டர்களில் மண் ஏற்றப்பட்டு அந்த மைதானத்தில் கொட்டுவதற்காக கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த 3 டிராக்டர்களில் இருந்த மண்ணை கொட்டவிடாமல் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘இந்த மைதானத்தில் நாங்கள் தினமும் நடை பயிற்சி செய்து வருகிறோம். இங்கு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட மண்ணை கொட்டி வருகிறார்கள். இதனால் 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் தற்போது 2½ ஏக்கராக சுருங்கி விட்டது.எனவே இங்கு கொட்டப்பட்டு உள்ள மண்ணை அகற்றவும், குடிமகன்கள் இங்கு வந்து குடிக்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.
அப்போது மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், ‘இங்கு கொட்டப்பட்டுள்ள மண் அனைத்தும் இன்னும் ஒருவார காலத்துக்குள் அள்ளப்பட்டு விடும். எனவே தற்போது டிராக்டர்களை விடுவியுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் 3 டிராக்டர்களையும் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.