பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்


பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:15 AM IST (Updated: 15 Jun 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு அரசாணை எண் 49-ன் படி ஏறத்தாழ 90 சதவீத பணிகள் முடிவுற்று அதற்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பின், தற்போது அந்த அரசாணை எண் 49-ஐ அரசு நிறுத்தி வைத்துள்ளதால் கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 25 ஆண்டுகளாக கால்நடை பரா மரிப்புத்துறையில் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாணை எண் 49-ஐ உடனடியாக நடைமுறைப்படுத்தி புதிய ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் 29 மருத்துவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை விளக்க ஊர்வலம்

பின்னர் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பாலக்கரை வழியாக கால்நடை மருத்துவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர். கோரிக்கை விளக்க ஊர்வலத்தில் கால்நடை மருத்துவர்கள் இளையராஜா, பாலமுருகன், செந்தில்குமார், மூக்கன், ராமன், ஷர்மிளா, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணிகள் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 36 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இங்கு பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் பல்வேறு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கால்நடை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில மருத்துவமனைகளில் கால்நடை ஆய்வாளர்களை கொண்டு கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில இடங்களில் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த பொதுமக்கள் அதனை திரும்பி வீட்டிற்கே கொண்டு சென்றதை காண முடிந்தது. மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் கால்நடை மருத்துவமனை களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story