ஆட்டோக்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது


ஆட்டோக்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது
x
தினத்தந்தி 15 Jun 2017 5:05 AM IST (Updated: 15 Jun 2017 5:05 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோக்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது என்று சட்டசபையில் மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

பெங்களூரு

ஆட்டோக்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது என்று சட்டசபையில் மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

சலுகை கட்டண பஸ் பாஸ்

கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்கள் சுதாகர்ரெட்டி, கோபாலய்யா, சீனிவாஸ் ஆகியோர் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி பதிலளித்து பேசும்போது கூறியதாவது:–

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கடந்த 9–ந் தேதி பஸ் பாஸ் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச குடிநீர் பாட்டில்கள்

இதற்கு அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்ததால் பஸ் பாஸ் வழங்கும் பணியை தொடங்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் 33 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளுக்கு இந்த பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள பஸ் பாஸ் கட்டணம் அதிகமாக உள்ளதாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. மேலும் பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை.

கர்நாடக அரசின் சொகுசு பஸ்களில் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. ஐராவத் பஸ்களில் இத்தகைய குடிநீர் வழங்குவது இல்லை. கர்நாடகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளிடம் இஷ்டம்போல் அதிகமாக கட்டணம் வசூலிப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தால் அதிகபட்சமாக அபராதமாக ரூ.300 விதிக்கப்படும்.

ஒரே மாதிரியான கட்டணம்

கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக 4,384 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.15 லட்சத்து 34 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க அந்தந்த போக்குவரத்து ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளை பொறுத்து அந்த ஆணையம் கட்டணத்தை நிர்ணயம் செய்யும். வாகன செலவு, முதலீடு மீதான வட்டி, நிர்வகிக்கும் செலவு, காப்பீடு, வரி, எரிபொருள், ஓட்டுனர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கவனத்தில் கொண்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆட்டோக்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்க முடியாது.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.


Next Story