வேலூரில் ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர்,
ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாம்உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்டரங்கில் ரத்ததான சிறப்பு முகாம் நடந்தது.
முகாமுக்கு வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் கலிவரதன் தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலகு திட்ட அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். வேலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்துகொண்டு, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முகாமில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலகு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டு இருந்த அரங்கத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
விழிப்புணர்வு ஊர்வலம்இதையடுத்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் வரை சென்றது.
ஊர்வலத்தில் சென்றவர்கள் ரத்ததானம் செய்வது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.
இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராஜாசிவானந்தம், கலெக்டர் அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.