வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட அனைத்து கல்வி நிலையங்களிலும் வளாக தூதுவர், ஒருங்கிணைப்பாளர் நியமனம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட அனைத்து கல்வி நிலையங்களிலும் வளாக தூதுவர், ஒருங்கிணைப்பாளர் நியமனம்
x
தினத்தந்தி 15 Jun 2017 5:44 AM IST (Updated: 15 Jun 2017 5:43 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வளாக தூதுவராக மாணவர் ஒருவரும், வளாக ஒருங்கிணைப்பாளராக அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் முதல் முறையாக வாக்காளர்களின் பெயர் சேர்ப்பது தொடர்பாக வருகிற ஜூலை 1–ந்தேதி முதல், 31–ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல் மற்றும் இளம் தலைமுறை வாக்காளரிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தச் சிறப்பு முகாம் நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை அனைத்துத் தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகங்களில் 18 முதல் 21 வயதுடையோர் பெயர் சேர்ப்பதற்கானப் படிவங்கள் பெறும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜூலை மாதம் 9–ந்தேதி மற்றும் 23–ந்தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,627 வாக்குச்சாவடி அமைவிடங்கள், 13 தாசில்தார் அலுவலகங்கள், 12 நகராட்சி அலுவலகங்கள், 3 உதவி கலெக்டர் அலுவலகங்கள் ஆக மொத்தம் 1,655 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கானப் படிவங்கள் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வளாக தூதுவர்

மேற்படி வயதுடைய வாக்காளர் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். மேலும் வேலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேல் வயதுடையோர் மாணவர்களாக உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வளாக தூதுவராக மாணவர் ஒருவரையும், வளாக ஒருங்கிணைப்பாளராக அலுவலர் ஒருவரையும் நியமனம் செய்து, அந்தந்த கல்லூரி வளாகத்தில் பயிலும் மாணவர்களிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அந்தக் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் மூலமாக ஒரு வருவாய்த்துறை அலுவலரை நியமனம் செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

களப்பணியாளர்கள்

மேலும் 3 ஆயிரத்து 439 வாக்காளர் பட்டியல் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று 18 முதல் 21 வயதுடையோரை கணக்கெடுத்து மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பவர்களின் பெயரை சேர்த்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தப் பணியினை கண்காணிக்க 224 மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தப் பணி சிறப்பான வகையில் நடப்பதை உறுதி செய்திடும் வகையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு துணை கலெக்டர் நிலையிலான அலுவலர் சிறப்பு அலுவலராக நியமனம் செய்து பணியினை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story