ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும்
திருவண்ணாமலையில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும் என்று மனுநீதி நாள் முகாமில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும் என்று மனுநீதி நாள் முகாமில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
மனுநீதி நாள் முகாம்திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் முனியந்தல், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் ஆகிய கிராமங்களுக்கு மனுநீதி நாள் முகாம் நடந்தது. திருவண்ணாமலை உதவிகலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். தாசில்தார் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ்குமார், மண்டல துணை தாசில்தார் அமுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி வரவேற்றார்.
முகாமில் வீட்டுபனை பட்டா, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வேளாண் உபகரணங்கள் என பொதுமக்களிடம் இருந்து 408 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 152 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன. 55 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 201 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
தீர்வு காணப்பட்ட 152 மனுக்களின் பயனாளிகளுக்கு உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ரூ.4½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:–
கிராமப்புற இளைஞர்கள்மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களும் ‘ஆன்லைனில்’ பதிவு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியான அனைத்து நபர்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தகுதியற்றவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.
வருவாய்த்துறை அலுவலர்கள் சிறு விவசாயிகளுக்கான சான்று விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மட்டும் சான்றிதழ் கொடுக்காமல், சிறு விவசாயி என தெரிந்தால் நீங்களே நேரில் சென்று அவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம். கிராமப்புற பகுதிகளில் 18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.
திருவண்ணாமலையில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும். நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் செல்வராஜ், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பத்ராசலம், இனாம்காரியந்தல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பலராமன், ஜீவிதா, பரணிதரன், சத்யாதேவி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.