காதலில் தோற்றுப்போன வெற்றியாளன்!


காதலில் தோற்றுப்போன வெற்றியாளன்!
x
தினத்தந்தி 16 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 3:24 PM IST)
t-max-icont-min-icon

பணம், புகழ், பதவி, அதிகாரம், கவுரவம் என அனைத்தும் பெற்ற அந்த மா மனிதன், காதல் எனும் மென்மையான உணர்வினால் வஞ்சிக்கப்பட்டார்.

பிரகாம் லிங்கன், உலக வரலாறு கண்ட மாமனிதர்களில் ஒருவர். மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சுய முயற்சியால் கல்வியறிவு பெற்று, அரசியல் உலகில் கால் பதித்தவர். அமெரிக்காவில் பல காலம் நிலவி வந்த அடிமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, அதனால் மூண்ட பெரும் உள்நாட்டுப் போரை அடக்கி, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டியவர்.

உறுதியும், கொள்கைப் பிடிப்பும், தளராத தன்னம்பிக்கையும், போராடும் குணமும் கொண்ட கடுமையான மனிதர் என்று உருவகப்படுத்தப்பட்ட லிங்கனுக்கு, ஒரு மென்மையான மறுபக்கமும் இருந்தது. 

அரசியல் உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இளைஞராக இருந்த லிங்கன் போராடிக் கொண்டிருந்த காலம் அது! சாதித்துக் காட்டவேண்டும் என்ற ஒருமுகப்பட்ட உணர்வுடன் உழைத்துக் கொண்டிருந்த லிங்கனின் மனதில் அழகியதொரு சலனத்தை ஏற்படுத்தினாள் ஓர் இளம் பெண். அவள்.. ஆன் மேய்ஸ் ரட்லெட்ஜ். சுருக்கமாக ஆன்!

1813–ம் ஆண்டு, அவள் பிறந்தபோது அவளது தந்தை, மகளுடைய அழகிய கண்களைப் பார்த்து, ‘ஏய்.. என் நீலக் கண்ணழகி’ என்று பெருமை பொங்க அழைத்தார். அவளுடைய தந்தை அப்போது நியூ சலேம் நகரில் விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஊரில் அப்போது பள்ளிக்குச் சென்று படித்த பெண்களே கிடையாது. நியூ சலேம் நகரின் அந்த அவலத்தை மாற்ற, ஆனின் தந்தை தன்னுடைய பிரிய மகளை பள்ளிக்கு அனுப்பினார். ஆனும் பள்ளிக்குச் சென்று வந்த நேரம் தவிர, மீதி நேரத்தில் தந்தை நடத்தி வந்த பயணியர் விடுதியை நிர்வகிப்பதில் உதவி புரிந்து வந்தாள்.

பொன்னிறக் கூந்தல், அழகு நீலக் கண்கள், சிரித்த முகம், நட்பான பார்வையுடன் பார்ப்பவரை வசீகரிக்கும் தோற்றம். அவள் ஒரு சிறந்த மாணவியாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல பெண்ணாகவும் மற்றவர்களால் பாராட்டப்பட்டாள். அப்போதுதான் அந்த நகருக்குப் புதிதாக வந்து சேர்ந்தார் லிங்கன். சில காலம் ஆனின் தந்தை நடத்திய விடுதியில் உணவருந்தினார். லிங்கனுக்கும் ஆனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது அங்கேதான்.

லிங்கனின் புத்திசாலித்தனம், உள்ளூற இருந்த போராட்ட குணம், புன்னகை மாறாத முகம், யாரையும் புண்படுத்தாத பேச்சு.. எல்லாமே அந்த நீலக் கண்ணழகியைக் கவர்ந்தன. பாடங்களில் சந்தேகம் என்றொரு சாக்கை ஏற்படுத்திக் கொண்டு, லிங்கனுடனான சந்திப்புகளை அதிகப்படுத்திக் கொண்டாள்.

(ஆன் ரட்லெட்ஜும், லிங்கனும் சேர்ந்து படித்த ஆங்கில இலக்கண நூல் ஒன்று, அட்டையில் ஆனின் கையெழுத்துடன், அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.)

ஆனின் விருப்பத்தை புரிந்துகொண்டவர், தனது காதலை அந்த நீலக் கண்ணழகியிடம் ஓர் ஆண் மகனாக, கம்பீரமாக ஒரு நாள் எடுத்துரைத்தார். லிங்கனின் நேர்மையான அணுகுமுறை ஆன் ரட்லெட்ஜை அந்தக் கணமே தணலில் இட்ட மெழுகாக உருக்கி விட்டது. அவரின் உண்மைக் காதலை ஏற்றாள். லிங்கன் சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற பின், இரு மனங்கள் இணையும் திருமண விழாவை ஊர் உலகை சாட்சியாக வைத்து நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.

ஆனால்..

அதற்கு முன்னே திடீரென ஆன் டைபாய்டு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டாள். உயிருக்குப் போராடினாள். அவளது நிலைமை மோசமானது. கட்டிலில் கயிறாகக் கிடந்த அவள், லிங்கனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். லிங்கன் அவளைச் சென்று பார்த்தார். கடைசி சந்திப்பு என்பதை புரிந்துகொண்ட ஆன், கடைசி ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டாள். ‘நீலக்கண்ணழகி’ என்று லிங்கனை சொல்லச்சொல்லி ரசித்தவள்... மற்றொரு ஆசையையும் நிறைவேற்ற சொல்லியிருந்தாள். 

அதுதான் கல்லறை வாசகம்... 

‘என் காதல் ஆபிரகாம் லிங்கனுடன் இணைந்த துணைவியான நான் ஆன் ரட்லெட்ஜ், மரணம் தந்த பிரிவால் இந்தக் கல்லறையில் உறங்குகிறேன்’ என்று கல்லறையில் பொறிக்கச் சொன்னாள். அவரது இறுதி நாட்களும் நெருங்கியது. ஆனின் இறப்பு செய்தி லிங்கனை மிகவும் பாதித்தது. தற்கொலைக்குக் கூட துணிந்து விட்ட அவரிடமிருந்து, கத்தி போன்ற அபாயகரமானப் பொருட்களை நண்பர்கள் மறைத்து வைத்தனர்.

ஏனெனில் சிறு வயதில் தாயை இழந்து, அதனால் தன்னலமற்ற அன்பிலிருந்து வஞ்சிக்கப்பட்ட லிங்கன், அதை மீண்டும் பெற்றது ஆனிடமிருந்துதான். யாருக்காகவும் காத்திருந்து பழக்கப்படாத காலம், சரியாக தன் கடமையைச் செய்தது. 

அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக லிங்கன் மாறினார். செல்வாக்குள்ள அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மேரி டோட் என்கிற பெண்மணி, லிங்கன் தன் வாழ்க்கையில் பல சிகரங்களைத் தொடப்போகிறார் என்பதை யூகித்து அவரோடு இணையச் சம்மதம் கேட்டாள்.

ஆனின் அன்புப் பிடியில் கட்டுண்டு இருந்த லிங்கன், அவளது கோரிக்கைக்கு இணங்கவில்லை. லிங்கனின் மறுப்புக்குக் காரணம் என்னவென்று விசாரித்து அறிந்து கொண்டாள் மேரி. அதன் பின் ஆன் போலவே தனது நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டாள். ஆன் உதிர்க்கும் அதே அன்பு வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினாள். பிறகு லிங்கனைச் சந்தித்தாள். மறுபடியும் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினாள்.

லிங்கனுக்கு தனது கல்லறைக் காதலியே உயிர் பெற்று வந்த மாதிரி இருந்தது. ஒரு கணமும் யோசிக்காமல் ஆனிடம், அல்ல.. அல்ல.. மேரியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தார். திருமணம் முடிந்தது. 1861–ல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி வானில் ஊர்வலம் வந்தார். ஆனால், அவருடைய சொந்த வாழ்க்கை பெரும் போராட்டமாகப் போய் விட்டது. அவரை மணம் புரிந்த பின் மேரி நிறையவே மாறிப் போனாள். ஆடம்பரச் செலவுகளுக்காகவே பிறப்பெடுத்த செலவாளி போல் நடந்து கொண்டாள். தனது உடைமையாகத் தான் பெற்றிருந்த அந்தக் கறுப்பு வைரத்தை மதிக்காமல் அவரை எந்நேரமும் எடுத்தெறிந்து பேசினாள்.

மேரி உருவில் ஆன் ரட்லெட்ஜ்தான் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்த லிங்கனும் மனைவி மேரியை அவள் போக்கிலேயே போக விட்டார். ஆனிடமிருந்த காதல் மேரியிடமும் என்றாவது ஒருநாள் பிறக்கும் என்று அவர் நம்பினார். ஆனால், 1865–ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த அன்பும் காதலும் அவருக்கு மேரியிடமிருந்து கிடைக்கவே இல்லை. 

பணம், புகழ், பதவி, அதிகாரம், கவுரவம் என அனைத்தும் பெற்ற அந்த மா மனிதன், காதல் எனும் மென்மையான உணர்வினால் வஞ்சிக்கப்பட்டார். 

‘உனக்கு ஆழ்ந்த காதல் மட்டும் கிடைக்கும். அல்லது அது தவிர மற்ற அனைத்தும் கிடைக்கும். எது வேண்டும் சொல்?’ என்ற கேள்வி ஒருவேளை லிங்கனிடம் கேட்கப்பட்டிருந்தால், அவரது பதில் நிச்சயம் ‘காதல்’ என்பதாகவே இருந்திருக்கும்.

Next Story