டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்


டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 2:30 AM IST (Updated: 15 Jun 2017 6:20 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியேறும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி–பசுவந்தனை ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்து மது வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவர்கள், பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் பரமராஜ், தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மாதர் சங்க மாவட்ட தலைவர் சரோஜா, கோமதி மற்றும் திரளான பொதுமக்கள் வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இந்த போராட்டத்தையொட்டி அங்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு குடியேற வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து சமையல் செய்ய ஏற்பாடு செய்தனர்.

பின்னர் அவர்களிடம், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியன், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், கலால் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து டாஸ்மாக் கடையை வருகிற 20–ந் தேதிக்குள் மூட வேண்டும். இல்லையெனில் டாஸ்மாக் கடை முன்பு கலால் தாசில்தார் உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story