குருவிகுளம் அருகே கோவில் விழாவில் தகராறு: 4 பேருக்கு கத்திக்குத்து; அண்ணன்– தம்பி கைது


குருவிகுளம் அருகே கோவில் விழாவில் தகராறு: 4 பேருக்கு கத்திக்குத்து; அண்ணன்– தம்பி கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 1:15 AM IST (Updated: 15 Jun 2017 8:51 PM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் 4 பேரை கத்தியால் குத்தியதாக அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம்,

குருவிகுளம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் 4 பேரை கத்தியால் குத்தியதாக அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கோவில் திருவிழா

நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள செட்டிகுளத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழாவும், முளைப்பாரி எடுத்து வரும் விழாவும் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் வீட்டுக்கு கூளையத்தேவன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன்கள் பிரவீன்குமார் (வயது 27), ரகுதரன் (24) ஆகியோர் விருந்துக்கு வந்திருந்தனர்.

4 பேருக்கு கத்திக்குத்து


இவர்கள் இருவருடன் சிலரும் கோவில் விழாவின்போது மதுபோதையில் ஆடியதாக கூறப்படுகிறது. இதை அதே ஊரை சேர்ந்த வேலுச்சாமி (38) என்பவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அதே ஊரை சேர்ந்த முத்துராஜ் (27), மாயகிருஷ்ணன் (26), முத்துகிருஷ்ணாபுரம் காளிராஜ் (29) ஆகியோர் அவர்களை விலக்கி விட முயன்றனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், ரகுதரன் ஆகியோர் கத்தியால் வேலுச்சாமி, முத்துராஜ், மாயகிருஷ்ணன், காளிராஜ் ஆகிய 4 பேரையும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 4 பேரும் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அண்ணன்–தம்பி கைது

இதுகுறித்து வேலுச்சாமி குருவிகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், ரகுதரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story