கோரம்பள்ளம் உள்ளிட்ட 3 குளங்களின் மராமத்து பணியில் நிதி முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


கோரம்பள்ளம் உள்ளிட்ட 3 குளங்களின் மராமத்து பணியில் நிதி முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2017 2:30 AM IST (Updated: 15 Jun 2017 8:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் உள்ளிட்ட 3 குளங்களின் மராமத்து பணியில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் உள்ளிட்ட 3 குளங்களின் மராமத்து பணியில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்


தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், உதவி கலெக்டர்கள் தீபக்ஜேக்கப், அனிதா, கணேஷ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:–

கரம்பை மண்

குளங்களில் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும. மண் அள்ளுவதற்கான காலஅவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும். கடந்த 2013–14–ம் ஆண்டில் கோரம்பள்ளம் குளத்தை ஆழப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் 10 சதவீதம் பணிகள் கூட நடைபெறவில்லை. அந்த நிதி எங்கே?. நபார்டு மூலம் கோரம்பள்ளம் குளம், பெட்டைக்குளம், பேய்க்குளம் ஆகிய குளங்கள் தூர்வாரப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அந்த குளங்கள் தூர்வாரப்படாமல் நிதி முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியேறும் போராட்டம்

முக்காணியில் ரூ.25 கோடியில் தடுப்பணை அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அந்த பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். எட்டயபுரம் கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லை. கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளும் இல்லை. இதனால் எங்கள் பகுதியில் கோழிகள் ஏராளமாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளன.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன்கள் மத்தியகால கடன்களாக மாற்றப்பட்டு வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மீது கடன் சுமத்தப்படுகிறது. ஆகையால் மத்தியகால கடன்களாக மாற்றினாலும் வட்டி வசூலிக்க கூடாது. 2015–16–ம் ஆண்டு மழை வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்சு தொகை பெற்றுக் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஜூலை மாதம் 7–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்.

கிராம நிர்வாக அதிகாரி மீது...

எட்டயபுரம் பகுதியில் டாஸ்மாக் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அந்த பகுதியில் உள்ள ஒரு கிராம நிர்வாக அலுவலர் போலியாக 120 வங்கி கணக்கு தொடங்கி, மானிய பணத்தை முறைகேடு செய்து உள்ளார். உதவிகலெக்டர், தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களில் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் வெங்கடேஷ்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது, ‘குளங்களில் கரம்பை மண்ணை பொதுப்பணித்துறையினரின் கனரக எந்திரங்களை பயன்படுத்தி அள்ளினால் அதற்கான பணம் செலுத்த வேண்டும். விவசாயிகளே சேர்ந்து பொக்லைன் வைத்து அள்ளினால் பணம் செலுத்த தேவை இல்லை. நான் பொறுப்பேற்றது முதல் குளம் தூர்வாரும் பணிகளுக்குத்தான் அதிக நேரத்தை செலவிட்டு உள்ளேன். இந்த பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணமுடியாது. ஒவ்வொரு பிரச்சினைகளாக தீர்க்க முடியும். மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை முடிந்தால், பாதி பிரச்சினை முடிந்து விடும். கோரம்பள்ளம் குளம் தனியார் மூலம் தூர்வாரும் பணி நடந்தாலும், உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை. கால்நடை டாக்டர்கள் பணிக்கு முறையாக வருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியகால கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Next Story