செங்குன்றம் அருகே லாரி மோதி பள்ளி மாணவி பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 9–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருக்கான். இவருடைய மகள் சைபுநிஷா (வயது 15). இவர், கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை சைபுநிஷாவை, அவருடைய சித்தப்பா ஜமால் கமருதீன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார்.
லாரி மோதி பலிசென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சிக்னல் அருகே சென்றபோது, ஆந்திராவில் இருந்து நெல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மாணவி சைபுநிஷா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடைய சித்தப்பா, ஜமால் கமருதீன், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டிரைவர் தப்பி ஓட்டம்விபத்து நடந்த உடன் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.