105 மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் போலீசார் அதிரடி நடவடிக்கை
கோவையில் ஓட்டுனர் உரிமம் பெறாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 105 மாணவர்களின் பெற்றோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கோவை,
கோவை மாநகர பகுதியில் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில், போக்குவரத்து துணை கமிஷனர் துரை மேற்பார்வையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்காக முக்கிய ரோடுகளின் சந்திப்பு பகுதியில் போலீசார் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நிறுத்தி, ஓட்டுனர் உரிமம் உள்ளதா?, அவர்கள் குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுகிறார்களா? என்று சோதனை செய்து வருவதுடன், ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது என்றும், அவ்வாறு ஓட்டிச்சென்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கோவையில் உள்ள அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் முக்கிய ரோடுகளில் உள்ள சந்திப்புகளில் நின்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை போலீசார் பிடித்து அவர்களின் பெற்றோரை வரவழைத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:–
105 மாணவர்கள் சிக்கினர்கோவை மாநகர பகுதியில் நடந்த விபத்துகளை கணக்கிடும்போது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லும்போதுதான் அதிக விபத்துகள் ஏற்பட்டதுள்ளது. இதைத்தொடர்ந்துதான், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யாரும் இருசக்கர வாகனங்களையோ அல்லது கார்களையோ ஓட்ட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று நடந்த சோதனையின்போது, கோவை மாநகர கிழக்குப்பகுதியில் 30 மாணவர்களும் மேற்கு பகுதியில் 75 மாணவர்களும் சிக்கினார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள் ஆவார்கள். இதில் சிலர் பள்ளிச்சீருடையுடன் வந்தனர். அவர்கள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்துள்ளனர்.
தலா ரூ.1000 அபராதம்எனவே அவர்களை பிடித்ததுடன், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிடிபட்டவர்களின் பெற்றோரிடம் இனிமேல், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்க மாட்டோம் என்று எழுதியும் வாங்கப்பட்டது.
எனவே பெற்றோர் யாரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை காரோ அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம். அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னர் தாராளமாக வாகனங்களை ஓட்ட அனுமதிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
–