குஜிலியம்பாறை அருகே 2 மாணவிகளுடன் செயல்படும் அரசு பள்ளி
குஜிலியம்பாறை அருகே 2 மாணவிகளுடன் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 99 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஆங்கில கல்வி மீது உள்ள மோகத்தால், குழந்தைகளின் பெற்றோர் இங்குள்ள அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக தனியார் பள்ளிகளிலேயே சேர்த்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கிராமப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் குடும்பத்தினரையும் கையோடு அழைத்து சென்று விடுகின்றனர். எனவே கிராம பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் முதியவர்கள் மட்டுமே உள்ளனர். இதுவும் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணமாகும்.
ஆர்வம் குறைவுஇந்தநிலையில் ஆர்.வெள்ளோடு ஊராட்சி அய்யம்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 100–க்கும் மேற்பட்டோர் படித்தனர். காலப்போக்கில் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வந்தார். அவருக்கு 2 ஆசிரியர்கள், 2 சத்துணவு ஊழியர்கள் என 4 பேர் பணிபுரிந்து வந்தனர். இதையொட்டி இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டார். மேலும் சத்துணவு ஊழியர்களும் மாற்றப்பட்டனர்.
நடவடிக்கைஇந்த கல்வியாண்டில் 2 மாணவிகள் மட்டுமே பள்ளியில் சேர்ந்தனர். தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே அவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றார். மேலும் சத்துணவு ஊழியர்கள் மாற்றப்பட்டதால் 2 மாணவிகளுக்கும் மதிய உணவு கொடுப்பதில்லை. இந்த பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம் கொள்ளாததால் பள்ளியை மூடும் நிலை உள்ளது. எனவே மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி அய்யபட்டியில் செயல்படும் பள்ளியிலும், மாணவர்களை சேர்க்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.