திண்டுக்கல் அருகே பச்சை நிறத்தில் அசுத்தமான குடிநீர் வினியோகம் கிராம மக்கள் அதிர்ச்சி


திண்டுக்கல் அருகே பச்சை நிறத்தில் அசுத்தமான குடிநீர் வினியோகம் கிராம மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே பச்சை நிறத்தில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் வழியில் உள்ள கிராமங்களுக்கும் அந்த திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் நேற்று வழங்கப்பட்டது.

அப்போது குடிநீர் பச்சை நிறத்தில் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடிநீர் மிகவும் அசுத்தமாக இருப்பதால் குடிக்க முடியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். குடிநீர் நிறம் பச்சையாக உள்ளதால், குளித்தால் தோல் பாதிப்பு வந்து விடும் என்றும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அதனை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

சுத்திகரித்து வழங்க வேண்டும்

அதேநேரம் நேற்றைய தினம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பதால் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில் அசுத்தமாக பச்சை நிறத்தில் குடிநீர் வந்ததால், சிலர் விலைக்கு குடிநீர் வாங்கினர். ஒருசிலர் குளிப்பதற்கு மற்றும் இதர பயன்பாட்டுக்கும் லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். நீரேற்று நிலையங்களி உள்ள தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பச்சை நிறத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story