குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை
வாடிப்பட்டியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களை செயல் அலுவலர் சமரசம் செய்தார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 23 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 20 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், மினி பவர் பம்புடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 17, 18 ஆகிய வார்டு பகுதிகளுக்கு வர வேண்டிய புதிய குடிநீர் இணைப்புகள் 1, 2 வார்டுகளுக்கு செல்கிறது என்று தகவல் வந்ததன் பேரில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதே போல் 11, 12 வார்டுகளில் குழாய்கள் பழுதால் குடிநீர் வர வில்லை என்று கூறியும், 10 வார்டில் பழுதடைந்துள்ள மினி பவர் பம்பினை சரி செய்யக் கோரியும் பொதுமக்கள் ஒன்று திரண்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உறுதிதகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி பொதுமக்களிடம் பேச்சுவார்த்த நடத்தி அந்தந்த வார்டுகளை நேரில் சென்று பார்வையிட்டு குறைகளை தீர்ப்பதாக உறுதியளித்தார். மேலும் இது தொடர்பாக செயல் அலுவலர் கலையரசி கூறியதாவது:–
வாடிப்பட்டி பேரூராட்சிக்கு வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 8.40 லட்சம் லிட்டர் குடிநீர் வந்தது. தற்போது வைகை வறண்டதால் நீரின் அளவு குறைந்து 1.30 லட்சம் லிட்டர் அளவு தண்ணீர்தான் வருகிறது. இதனை சீர் செய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொன் பெருமாள் கண்மாய் மறுகால் ஓடைப்பகுதியில் 5 ஆழ்துளைகிணறுகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டு அதிலிருந்து பைப் லைன் மூலம் அருகில் உள்ள வைகை கூட்டு குடிநீர் நீரேற்று உந்து நிலையத்தில் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஆழ்துளை கிணறுகள்மேலும் பொது நிதியிலிருந்து தற்போது குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்திட சாணாம்பட்டி மேல்நிலை குடிநீர்தொட்டி அருகில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறும், பொன்பெருமாள்கோயில் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட உள்ளது. எல்.புதூர் 8–வது வார்டு பெரியாறு பிரதான கால்வாய் அருகில் ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டிலும், தாதம்பட்டி மந்தையில் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டிலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற உள்ளது. போடிநாயக்கன்பட்டி வெங்கையா நாயக்கர் ஊரணி கிணற்றில் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டார் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டால் 18 வார்டுகளிலும் முழுமையாக குடிநீர் பற்றாக்குறை நீங்கிவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.