பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி 2-வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்


பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி 2-வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:00 AM IST (Updated: 16 Jun 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடி இன பட்டியலில் சேர்க்க கோரி உடுமலையில் 2-வது நாளாக மழைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மலைபுலையன் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக இவர்களின் கோரிக்கையை மாநில அரசு புறக்கணித்து வருவதாக மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இவர்கள் உடுமலை குட்டைதிடல் கச்சேரி வீதியில் உள்ள நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்றும் 2-வது நாளாக குட்டை திடலில் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. அப்போது குட்டை திடலில் சமையல் செய்து சாப்பிட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

இந்த நிலையில் மலைவாழ் மக்கள் நிர்வாகிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு, தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். இதுகுறித்து 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். அப்போது கலெக்டருடன் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். அதன்பின்னர் மலைவாழ் மக்கள் நிர்வாகிகள் உடுமலைக்கு திரும்பி வந்தனர். பின்னர் குட்டை திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மலைவாழ் மக்களிடம் ஆர்.டி.ஓ.சாதனைக்குறள் பேசினார். அப்போது உங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு கலைந்து சென்றனர்.

Next Story