எடப்பாடியில் பொதுமக்கள் முற்றுகையால் மதுக்கடை மூடப்பட்டது
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்ட மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதிய மதுக்கடைகளை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எடப்பாடி,
இதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடை அமைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
எடப்பாடி பஸ்நிலையத்தில் உள்ள மதுக்கடை மூடப்பட்டதால், பழைய எடப்பாடி சக்திநகருக்கு அந்த கடையை அதிகாரிகள் மாற்றம் செய்து அங்கு விற்பனை நடந்து வருகிறது. புதிதாக திறக்கப்பட்ட அந்த மதுக்கடை அருகில் பெண்கள் கழிப்பிடம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள பெண்கள், கழிப்பிடத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கடை மூடல்எனவே இப்பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் அந்த மதுக்கடைக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த கடை வேறுஇடத்திற்கு மாற்றப்படும் என கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடை மூடப்பட்டு ஏரி ரோடு பகுதிக்கு மாற்றப்பட்டது.