குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா செ.புதூர் காலனியில் அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் போதுமான குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் குடிநீருக்காக வெகு தொலைவு கால்கடுக்க நடந்தே சென்று வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் பிடித்து எடுத்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முற்றுகைஇதனால் ஆத்திரமடைந்த 50–க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.