எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் வலியுறுத்தினார்.
பெங்களூரு,
எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் வலியுறுத்தினார்.
விரைவாக முடிக்க வேண்டும்கர்நாடக சட்டசபையில் நேற்று பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் சங்கரலிங்கேகவுடா பேசியதாவது:–
எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கு விடுவிக்கப்படும் நிதி குறைவாகவே உள்ளது. இந்த திட்ட பணிகளை மாநில அரசு விரைவாக முடிக்க வேண்டும். 1,500 அடிக்கு ஆழ்துளை கிணறு தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
வெளி குத்தகை முறையை...‘நம்ம கிராமம் நம்ம ரோடு‘ திட்டத்தில் சாலைகள் தரமாக போடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் இப்போது பழுதாகியுள்ளன. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களிடையே தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கும், மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அரசு பணி நியமனங்களில் வெளி குத்தகை முறையை அறவே ஒழிக்க வேண்டும். இதனால் அரசின் வேலைகள் சரிவர நடப்பது இல்லை. அரசு கொடுக்கும் சம்பளம் ஊழியர்களுக்கு முழுமையாக சென்று சேருவது இல்லை. பள்ளி கல்வித்துறைக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போய்விடுகிறது.
ஆங்கில மோகம் அதிகமாக...மீதியுள்ள நிதியை கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் போதுமான அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லை. கட்டிடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அவற்றுக்கு வெள்ளை அடிக்க கூட நிதி கொடுக்க அரசு மறுக்கிறது. இவ்வாறு செய்தால் அழுக்கு படிந்த கட்டிடங்களில் குழந்தைகள் எப்படி கல்வி கற்பார்கள். அதனால் தான் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்பட அனைவரும் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும். மக்களிடையே ஆங்கில மோகம் அதிகமாக இருக்கிறது. இதனால் தான் அனைவரும் ஆங்கில பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள்.
ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பெங்களூருவில் அதிகமாக உள்ளன. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் பெங்களூரு வந்து அந்த நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. அதை வைத்து பெங்களூருவில் அவர்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. இதே நிறுவனங்களை தாலுகா தலைநகரங்களில் தொடங்கினால், வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை சேமிக்க முடியும். இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு சங்கரலிங்கேகவுடா பேசினார்.
நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்சங்கரலிங்கேகவுடா பேசிக் கொண்டிருந்தபோது, பேச்சை விரைவாக முடிக்குமாறு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த விசுவேஸ்வர ஹெக்டே காகேரி கூறினார். இதனால் கோபம் அடைந்த அவர், “நான் பேச நிறைய விஷயங்கள் உள்ளன. எனது பேச்சை விரைவாக முடித்தால் நான் எப்படி அனைத்து விஷயங்களையும் பேசுவது?. இல்லாவிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் இவ்வளவு நேரம் என்று ஒதுக்கிவிடுங்கள். அந்த நேரத்தில் நாங்கள் பேசிக் கொள்கிறோம்“ என்றார்.
இதற்கு பதிலளித்த விசுவேஸ்வர ஹெக்டே காகேரி, அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களை பேசவிடாமல் தடுப்பது எனது நோக்கம் அல்ல“ என்றார்.