மும்பையில் தண்ணீர் கட்டணம் ‘திடீர்’ உயர்வு இன்று முதல் அமல்


மும்பையில் தண்ணீர் கட்டணம் ‘திடீர்’ உயர்வு இன்று முதல் அமல்
x
தினத்தந்தி 16 Jun 2017 5:20 AM IST (Updated: 16 Jun 2017 5:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் தண்ணீர் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மும்பை

மும்பையில் தண்ணீர் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தண்ணீர் கட்டணம்

மும்பை பெருநகரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு மாநகராட்சி சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மோதக் சாகர், தன்சா, துல்சி, விகார், பட்சா, மத்திய மற்றும் மேல் வைத்தர்னா ஆகிய ஏரிகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்படுகிறது.

மும்பையில் சமீப வருடங்களில் கடந்த 2012–ம் ஆண்டு தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 2013 மற்றும் 2015–ம் ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டது.

திடீர் உயர்வு

தேர்தல் காரணமாக 2014 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தற்போது, மாநகராட்சி தண்ணீர் கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஆயிரம் லிட்டருக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் 25 பைசா அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் இருந்து ஆயிரம் லிட்டருக்கு ரூ.4.66 வசூல் செய்யப்படுகிறது.

இனி இந்த கட்டணம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் இருந்து ரூ.4.91 வசூலிக்கப்படும்.

குடிசைவாசிகளுக்கு...

குடிசைவாசிகளிடம் இருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.3.49 வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி இந்த கட்டணம் ரூ.3.68 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

வணிகம் சாராத நிறுவனங்களுக்கு தற்போது ஆயிரம் லிட்டருக்கு ரூ.18.66 வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கான தண்ணீர் கட்டணம் இனி ரூ.19.67 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கவுன்சிலர்கள் எதிர்ப்பு

வணிக நிறுவனங்களுக்கான தண்ணீர் கட்டணம் 5.40 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட இந்த தண்ணீர் கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இந்தநிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்தில் தண்ணீர் கட்டண உயர்வுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தண்ணீர் கட்டணம் அதிகரிப்பின் மூலம் மாநகராட்சிக்கு அடுத்த 10 மாதங்களுக்கு ரூ.54 கோடியே 44 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story