விவசாயிகளுக்கு மானியதொகைகள் அதிகரிப்பு அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு


விவசாயிகளுக்கு மானியதொகைகள் அதிகரிப்பு அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 5:23 AM IST (Updated: 16 Jun 2017 5:23 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகைகள் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் வேளாண்துறை, கல்வித்துறை, மின்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:–

மானியத்தொகை

வேளாண்துறையின் கீழ் இயங்கி வரும் கரியமாணிக்கம் கரும்பு உழவியல் ஆராய்ச்சி பண்ணை, மதகடிப்பட்டு அரசினர் பழத்தோட்டம் மற்றும் நாற்றங்கால் பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் நிலையம், காரைக்கால் மாதூர் அரசினர் விதைப்பண்ணை, வேளாண் அறிவியல் நிலைய பண்ணைகளில் நெல், கரும்பு, மணிலா, பயிறு வகைகள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அங்கக முறையிலான வேளாண்மை தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்ட மாதிரி திடல்கள் அமைக்கப்படும்.

காரைக்காலில் உள்ள வேளாண்மை கல்லூரியில் வேளாண் பொருளியல் பிரிவில் முனைவர் படிப்பிற்கான பாடத்திட்டம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் குழாய் கிணறுகள் அமைப்பதற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அதிகப்பட்ச மானியத்தொகை பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.1½ லட்சமாகவும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாகவும் அதிகரித்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மானியத் தொகை அதிகரிப்பு

நீர்மூழ்கி பம்ப் செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச மானியத்தொகை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கவும் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 லட்சமாகவும் உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டு முதல் காரைக்காலுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும்பொருட்டு பவர் டில்லர் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களை வாங்க பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாகவும், அட்டவணை இன விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரு.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

டிராக்டர் மற்றும் அதனுடன் இணைத்து இயக்கப்படும் உபகரணங்கள் வாங்க 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.4 லட்சமாக 20 பொது விவசாயிகளுக்கும், 75 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.6 லட்சம் 3 அட்டவணை இன விவசாயிகளுக்கும் வழங்க நடப்பு நிதியாண்டில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் சத்தான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உற்பத்தி செய்துகொள்ள இந்த ஆண்டு முதல் 75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் மற்றும் தோட்ட உபகரணங்கள் அடங்கிய ரூ.3 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை விதைப்பொருட்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதியில் வசிக்கும் 1000 பயனாளிகளுக்கு 75 சதவீத மானிய விலையில் இது வழங்கப்பட உள்ளது.

எல்.இ.டி. விளக்குகள்

மின்துறையில் புதியதாக 25 உயர்மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கும், 65 குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கும், 13 ஆயிரம் வீடுகளுக்கும், 1,700 வர்த்தக நிறுவனங்களுக்கும் 35 வேளாண் பம்பு செட்டுகளுக்கும், 200 தெருவிளக்குகளுக்கும் மின் இணைப்பு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுவை முழுவதிலும் உள்ள அனைத்து தெருமின் விளக்குகளையும் அதிநவீன எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

தற்போதுள்ள நில துணை மின்நிலையங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இங்குள்ள மின் உபகரணங்களை மாற்றி தற்போதுள்ள நவீன மின் உபகரணங்களை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.


Next Story