பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:00 AM IST (Updated: 16 Jun 2017 8:55 PM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

நெல்லை,

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மை இணை இயக்குனர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக 814 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளில் தண்ணீர் 5.2 சதவீதம் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணைகளில் 36 சதவீதம் தண்ணீர் இருப்பு இருந்தது.

தற்போது கால்வரத்து பாசன வசதி உடைய குளங்களில் 20 குளங்களில் மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. மற்ற 2,498 குளங்கள் வறண்டு விட்டன. பெரும்பாலான கிணறுகளும் வறண்ட நிலையில் உள்ளன. மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து முன்குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், விதை போன்றவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

இழப்பீட்டு தொகை

இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் நெல்லை மாவட்டத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்த விவசாயிகளின் பயிர்கள் வறட்சியால் கருகி விட்டன. அந்த பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இதுவரை இழப்பீட்டு தொகையை வழங்க வில்லை. இழப்பீட்டு தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டனர்.

அப்போது தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், 2 நாட்களில் நெல் பயிருக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படும். கரும்பு பயிர்களுக்கு 1 மாதம் கழித்து வழங்கப்படும் என்று கூறினார்.

அப்போது விவசாயிகள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் விவசாயிகள் பேசுகையில், ‘‘தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் விவசாயிகளை பயிர் காப்பீட்டு தொகை செலுத்துமாறு கூறுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கிறது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு தருமாறு கூறினால் அதை தருவதற்கு முன்வரமறுக்கிறார்கள்.

அரசே ஏற்க வேண்டும்

எனவே விவசாயிகளின் பயிர் காப்பீட்டை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும். லாபம் கிடைத்தால் அரசுக்கு சேரட்டும், பயிர்கள் பாதிக்கப்பட்டால் அரசு உடனடியாக கணக்கீடு செய்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்’’ என்றனர்.

இதற்கு கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.

இதே போல் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மயங்கி விழுந்த அலுவலர்

இந்த கூட்டத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த கோதண்டராமன் (வயது 35) என்ற அலுவலரும் கலந்து கொண்டார். அவர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பதில் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவரை அருகில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் செய்தனர். பின்னர் அவர் மீண்டும் கூட்டத்துக்கு வந்து கலந்து கொண்டார். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story