ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பஜார்–வாகன ஓட்டிகள் தவிப்பு
ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பஜார்–வாகன ஓட்டிகள் தவிப்பு போலீசார் பாராமுகம்
ஆம்பூர்
ஆம்பூர் பஜார் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. ஆனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
போலீஸ் நிலையங்கள்சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆம்பூர் விளங்குகிறது. நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், பஜார் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஆம்பூரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்–இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் 8 போலீஸ்காரர்கள் பணியிடம் காலியாகவே உள்ளது.
காலை மற்றும் மாலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் மற்றும் முக்கிய இடங்களில் நின்று போக்குவரத்து போலீசார் நின்று கண்காணிக்கின்றனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் குறைந்துள்ளது.
நெரிசலில் சிக்கித் தவிக்கும் பஜார்ஆனால் ஆம்பூர் பஜார் பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது. காலை முதல் இரவு வரை இந்த பஜார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் பஜார் பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். நடந்து செல்பவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பல நேரங்களில் சாலையில் நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நடந்து செல்வோர் மீது வாகனங்கள் உரசுகின்றன.
இதனால் பஜார் பகுதியில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போக்குவரத்து போலீசார் பஜார் பகுதிக்கு வருவதே இல்லை. தற்போது ரம்ஜான் பண்டிகை காலம் என்பதால் பஜாருக்கு பொருட்கள், துணிகள் வாங்க குடும்பத்துடன் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர்.
வாகன வசூல்அதே நேரத்தில் பஜாருக்கு வராத போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை என்ற பெயரில் நின்று கொண்டு விதிகளை மீறச்செல்லும் வாகனங்கள், ஓட்டுனர்களிடம் அபராதம் வசூலிப்பதில் குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர்களுடன் ஆம்பூர் டவுன் போலீசாரும் வேறு பகுதிகளில் விதிமீறிச்செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தொடர்கின்றனர்.
அவர்கள் முக்கியமான இந்த நேரத்திலாவது ஆம்பூர் பஜாரில் நெரிசலை தவிர்த்து போக்குவரத்தை சரி செய்ய டவுன் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் முன்வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். எனவே இந்த விஷயத்தில் ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுஇது குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் ஊர்காவல் படையின் பணிபுரிபவர்களை வைத்து ஒரளவுக்கு போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வருகிறோம். காலியாக உள்ள போக்குவரத்து போலீஸ் பணியிடம் நியமிக்கப்பட்டால் பஜார் பகுதியில் போலீசாரை நிறுத்த வசதியாக இருக்கும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் ஒரு நாளைக்கு இவ்வளவு வழக்குகள் பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் டவுன் போலீசாரும் வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்கின்றனர். அதனால் டவுன் போலீசாரை குறை சொல்ல முடியாது. அதிகாரிகள் சொல்வதால் செய்கிறார்கள். இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
எனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினறும் ஆம்பூர் பஜார் பகுதியில் தேவையான போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.