சிவங்கையில் அங்கீகாரமற்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தடுக்க வேண்டும்


சிவங்கையில் அங்கீகாரமற்ற பள்ளிகளில் மாணவர்  சேர்க்கையை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:30 PM GMT (Updated: 16 Jun 2017 7:35 PM GMT)

சிவங்கையில் அங்கீகாரமற்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

சிவகங்கை,

சிவங்கையில் அங்கீகாரமில்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், மாவட்ட துணைத் தலைவர் சூசைராஜ், மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தை முழுமையாக்கும் விதமாக காளையார்கோவில் அரசு கிழக்குப் பள்ளியில் இந்த கல்வியாண்டில் 100–க்கும் மேற்பட்ட மாணவர்களை முதல் வகுப்பில் சேர்த்தமைக்காக பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது,

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்

தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாட பொருட்களை சில அலுவலர்கள் தலைமையாசிரியர்களை வரவழைத்து வழங்குவதை தவிர்த்து பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும். சிவகங்கையில் அங்கீகாரமில்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பள்ளிகளில் உடனடியாக புதிய பணியிடத்தை ஒதுக்கீடு செய்து அதில் பணி நிரவலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை அதே ஒன்றியத்தில் பணியில் அமர்த்த வேண்டும்.

பள்ளி விவரங்களை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து அலுவலக பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்களுக்கு சங்க பிரதிநிதிகளுக்கு உரிய அழைப்பு விடுத்து பிரச்சினைகளை களைவதற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்புவனம் அருகே கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தொய்வில்லாமல் மேற்கொண்டு தமிழர்களின் பாரம்பரிய நாகரீகத்தை உலகம் அறிய செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஏற்பட்டுள்ள குடி தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story