கொச்சியில் மெட்ரோ ரெயில் சேவையை மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


கொச்சியில் மெட்ரோ ரெயில் சேவையை மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:15 AM IST (Updated: 17 Jun 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

கேரள மக்களின் கனவு திட்டமான கொச்சி மெட்ரோ ரெயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொச்சி,

கேரள மக்களின் கனவு திட்டமான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணி முடிந்தது. இதை யொட்டி ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.
இதைத்தொடர்ந்து கொச்சியில் மெட்ரோ பறக்கும் ரெயில் சேவை ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரையில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் விமான படையின் தனி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு கொச்சி வருகிறார். அவரை கேரள கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்கிறார்கள். அதைத்தொடர்ந்து 10.35 மணிக்கு பாலாரி வட்டத்தில் புதிய மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த ரெயிலில் பத்தடி பாலம் வரை பயணம் செய்கிறார். பின்னர் கலூர் சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் மெட்ரோ ரெயில் சேவையினை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து 12.15 மணிக்கு புனித தெரசா கல்லூரியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகு மதியம் 1.25 மணிக்கு கொச்சியில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, கொச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற 160 கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் போலீஸ் அதிகாரிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

காலை 6 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கொச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொச்சி மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் வி.ஐ.பி.க்கள் பட்டியலில் கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் கொச்சி மெட்ரோ தலைவர் ஸ்ரீதரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இந்த நிலையில் கேரள அரசு தலையீட்டின் பேரில் அவர்கள் இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Next Story