தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர் போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை


தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர் போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 17 Jun 2017 4:00 AM IST (Updated: 17 Jun 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர். அவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்துக்கு பின் கடந்த புதன்கிழமை நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். வழக்கமாக புதன்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்ப வேண்டும். ஆனால் புதன்கிழமை நள்ளிரவு கடலுக்கு சென்றதால் வழக்கத்துக்கு மாறாக நேற்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பினர். ஆனால் மீனவர்களின் வலையில் போதிய அளவு பெரிய மீன்கள் சிக்கவில்லை. குறைந்த அளவு சிக்கிய இறால்களை மீனவர்கள் தரம் பிரித்து எடுத்து சென்றனர். இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறிய தாவது:-

நஷ்டம்

மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளில் பராமரிப்பு பணிகள் செய்ய ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்வார்கள். இவ்வாறு மீனவர்கள் தங்கள் படகுகளில் பராமரிப்பு பணிகள் செய்து கடலுக்கு சென்றனர். முதல் நாளில் மீனவர்கள் மீன்பிடிக்க குறைந்தது 300 லிட்டர் வரை டீசல் நிரப்ப வேண்டி இருந்தது. மீனவர்களுக்கு தினக்கூலி, ஐஸ், தளவாடபொருட்கள் என மொத்தம் சராசரியாக ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் மீனவர்களின் வலைகளில் நல்ல விலைபோகும் பெரிய மீன்கள் சிக்கவில்லை. மேலும் ஒரு படகுக்கு சுமார் 200 கிலோ இறால் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஒரு படகுக்கு 50 முதல் 100 கிலோ வரைதான் இறால் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இறால்களுக்கு தற்போது நல்ல விலை கிடைக்காததால் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story