தண்ணீர் பிரச்சினை காரணமாக பருத்தி சாகுபடியில் 50 சதவீத மகசூல் பாதிப்பு
தண்ணீர் பிரச்சினை காரணமாக பருத்தி சாகுபடியில் 50 சதவீத மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குவிண்டாலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணை கடந்த சில ஆண்டுகளாக உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி கேள்வி குறியானது. ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு காவிரி தண்ணீர் முற்றிலும் கிடைக்காமல், பருவமழையும் ஏமாற்றியதால் திருவாரூர் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.
தண்ணீர் பிரச்சினை காரணமாக கோடை சாகுபடி மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுடன், அதற்கு மாற்றாக குறைந்த தண்ணீரை பயன்படுத்தி எள், பருத்தி, நிலக்கடலை போன்றவற்றை பயிரிட வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும் கடந்த ஆண்டு பருத்தி சாகுபடிக்கு உரிய விலை கிடைத்ததால் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், வலங்கைமான், கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 22 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் கோடை மழை பெய்யாததாலும், வறட்சியாலும் தண்ணீர் பிரச்சினை காரணமாக பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
அதிக விலை நிர்ணயம்இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் விளைந்து, குவிண்டால் ரூ.6 ஆயிரம் என்ற அளவிற்கு விலை கிடைத்தது. உரிய விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு தண்ணீரை வாங்கி இறைத்தும் பயனில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்தும் தண்ணீர் பிரச்சினை காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினை காரணமாக பருத்தி சாகுபடியில் 50 சதவீத மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பருத்தி குவிண்டாலுக்கு அதிக விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.