சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ரத்ததானம் முக்கிய பங்காற்றுகிறது கலெக்டர் பார்த்திபன் நெகிழ்ச்சி


சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ரத்ததானம் முக்கிய பங்காற்றுகிறது கலெக்டர் பார்த்திபன் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Jun 2017 3:45 AM IST (Updated: 17 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

சாதி, மதங்களை கடந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ரத்ததானம் முக்கிய பங்காற்றுகிறது என்று கலெக்டர் பார்த்திபன் பேசினார்.

காரைக்கால்,

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சித்ரா தலைமை தாங்கினார். நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உதயகுமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடர்ந்து ரத்ததானம் செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், 10-க்கும் மேற்பட்ட முறை ரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தானத்தில் சிறந்தது

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் தானம். தானத்தில் பல வகைகள் இருந்தாலும் சிறந்த தானமாக ரத்ததானம் கருதப் படுகிறது. ஏனென்றால் ரத்ததானம் வழங்குவதன் மூலம் ஒருவரது விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்படுகிறது. பிறப்பால் நாம் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் இயற்கை என்றைக்கும் நம்மை அப்படி பிரித்து பார்ப்பதில்லை. அதனால்தான் எந்தவொரு ரத்த வகையும் அதே வகையை சேர்ந்த எந்தவொரு மனிதனுக்கும் மதத்தை கடந்து பொருந்தக்கூடியதாக இயற்கையாக அமைந்துள்ளது. சாதி, மதங்களை கடந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ரத்ததானமும் முக்கிய பங்காற்றுகிறது.

காரைக்கால் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் நிரந்தரமாக அளிக்கும் ரத்தம் காரைக்கால் மாவட்டத்தின் ரத்த தேவையை பூர்த்தி செய்து புதுவையின் மற்ற பிராந்தியங்களுக்கும் தரப்படுகிறது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சென்று சேர இதுபோன்ற விழாக்கள் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

விழாவில் டாக்டர்கள் கண்ணகி, விஜயகுமார், அசோக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ரத்த வங்கி அதிகாரி மதன்பாபு நன்றி கூறினார். முன்னதாக காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பார்த்திபன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story