அரசு பெண் ஊழியரிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து
மணப்பாறையில் அரசு பெண் ஊழியரிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.
மணப்பாறை,
மணப்பாறை நகரில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 42). இவர் செட்டியப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று தனது கணவர் நடத்தி வரும் மளிகை கடையின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென எஸ்தரின் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்தனர்.
உடனே எஸ்தர், திருடன்.... திருடன்.... என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் நின்று கொண்டிருந்த பூமாலைப்பட்டியை சேர்ந்த ஜேம்ஸ்(48), அவரது தம்பி அமுல்ராஜ்(40)ஆகிய இருவரும் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் அவர்கள் 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டு விட்டனர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அமுல்ராஜ் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடர் கொள்ளையால் மக்கள் பீதி
மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள்அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் வீட்டில் இருக்கவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ அச்சப்படுகின்றனர். நேற்று நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை தனிப்படைகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.