திருச்சி அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்


திருச்சி அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 17 Jun 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மாயமான நிதி நிறுவன அதிபரை கொன்று புதைத்ததாக தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைதான வாலிபர் போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சோமரசம்பேட்டை,

திருச்சி சோமரசம்பேட்டையை அடுத்த இனாம்புலியூர் மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவா(வயது 22). கூலித்தொழிலாளி. இவருடைய மாமா பெண்ணை, கரூர் மாவட்டம் முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ஜெயகாந்தன்(20) காதலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேவா, ஜெயகாந்தனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தேவாவை, ஜெயகாந்தன், தாயனூரை சேர்ந்த ராஜூ(20), அதவத்தூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்(19) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் தேவாவின் தாய் செல்வியை அரிவாளால் வெட்டிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகாந்தன், ராஜூ, ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெயகாந்தனின் செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அவர் சோமரசம்பேட்டை போசம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த மணியின் மகன் வினோத்திடம்(31) அடிக்கடி பேசியதாக தெரியவந்தது.
வினோத் நிதி நிறுவன அதிபர் ஆவார். மேலும் அதவத்தூரை அடுத்துள்ள சுண்ணாம்புகாரன்பட்டியில் மொத்தமாக சிமெண்டு மூட்டைகள் வியாபாரம் செய்யும் கடையும் நடத்தி வந்தார். வினோத்தை கடந்த மாதம் 9-ந்தேதி முதல் காணவில்லை என்று அவருடைய பெற்றோர் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தனர். இதையறிந்த போலீசார், வினோத் குறித்து ஜெயகாந்தனிடம் விசாரித்தனர்.

திடுக்கிடும் தகவல்

இதில் வினோத்தை, ஜெயகாந்தன், அதவத்தூர் பள்ளக்காட்டை சேர்ந்த லோகநாதன்(20), போசம்பட்டியை சேர்ந்த ஜீவா(20), கீரிக்கல்மேட்டை சேர்ந்த மனோகர் மகன் ராஜ்குமார்(20) ஆகியோருடன் சேர்ந்து கொன்று, உடலை உய்யக்கொண்டான் வாய்க்காலில் புதைத்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், ஜெயகாந்தனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், ஜெயகாந்தன் தன்னுடைய செலவிற்காக வினோத்திடம் ரூ.20 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ.1,000 மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்கவில்லை.

இதனால் மீதி பணத்தை தருமாறு ஜெயகாந்தனிடம், வினோத் தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால் ஜெயகாந்தன், நண்பர்கள் உதவியுடன் வினோத்தை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி இரவு திருச்சியை அடுத்த வயலூர் ரோடு உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு வினோத்திடம், ஜெயகாந்தன் கூறினார். இதனை நம்பிய வினோத்தும் பணத்தை வாங்குவதற்காக அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

கொன்று புதைப்பு

அங்கு ஜெயகாந்தனும், அவருடைய நண்பர்கள் லோகநாதன், ஜீவா, ராஜ்குமார் ஆகியோரும் இருந்தனர். அப்போது பணத்தை கேட்ட வினோத்தை, அவர்கள் நைசாக பேசி அழைத்து சென்று உய்யக்கொண்டான் வாய்க்காலின் பாசன குழுமியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். 20 அடி உயர குழுமியில் இருந்து கீழே விழுந்த வினோத், அங்கு கிடந்த கல்லில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் தனது நண்பர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு ஜெயகாந்தன் மட்டும், அவருடைய வீட்டிற்கு சென்று மண்வெட்டியை எடுத்து கொண்டு வந்தார். அவரும், நண்பர்களும் சேர்ந்து உய்யக்கொண்டான் வாய்க்காலில் குழி தோண்டி வினோத்தின் உடலை புதைத்து விட்டு, அவருடைய மோட்டார் சைக்கிள், 2 ஏ.டி.எம். கார்டுகள், செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

இவை அனைத்தும் போலீசாரிடம் ஜெயகாந்தன் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது.

நடித்து காட்டினார்

இதையடுத்து ஜெயகாந்தனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று காலை சிறையில் இருந்த ஜெயகாந்தனை போலீசார், உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன குழுமிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு ஜெயகாந்தன், வினோத்தை எப்படி கொன்றார் என்பதை நடித்து காட்டினார். மேலும் வினோத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டினார்.

இதையடுத்து வினோத்தின் உடலை தோண்டி எடுத்து, அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவக்குழுவினர் வராததால் இன்று (சனிக்கிழமை) காலை வினோத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே ஜெயகாந்தனை உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதிக்கு போலீசார் அழைத்து வந்த போது அந்தப்பகுதியில் வினோத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர்.

3 பேரை பிடித்து ...

இதைத்தொடர்ந்து ஜெயகாந்தனை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்படி வினோத்தின் மோட்டார் சைக்கிள், 2 ஏ.டி.எம். கார்டுகள், செல்போன் மற்றும் தேவாவை கொலை செய்ய பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

வினோத்தின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட லோகநாதன், ஜீவா, ராஜ்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வினோத்தின் உடல் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக
அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.


Next Story