மைசூரு, மண்டியாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்


மைசூரு, மண்டியாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:59 AM IST (Updated: 17 Jun 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசலுக்கு தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை கண்டித்து நேற்று மைசூரு, மண்டியாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

மைசூரு,

பெட்ரோல், டீசலுக்கு தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை கண்டித்து நேற்று மைசூரு, மண்டியாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

தினந்தோறும் விலை மாற்றி அமைப்பு

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இது புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 16–ந்தேதி (நேற்று) முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், அதற்கு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து நேற்று (16–ந்தேதி) மைசூரு, மண்டியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இரு மாவட்ட பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் அறிவித்தனர்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

இந்த நிலையில், மத்திய அரசின் முடிவை கண்டித்து நேற்று மைசூரு, மண்டியாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மைசூரு, மண்டியா மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

மண்டியா மாவட்டத்தில் எந்தவொரு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் திறக்கப்படவில்லை. மைசூருவில் ஒருசில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது. மண்டியா மாவட்ட பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் பெங்களூரு–மைசூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூருவில் ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், பெட்ரோல், டீசலுக்கு தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதனால் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். முன்பு இருந்தது போல 15 நாட்களுக்கு ஒருமுறை விலையை மாற்றி அமைக்கப்படும் முறையையே பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.

வாகன ஓட்டிகள் அவதி

நேற்று காலை முதல் மாலை வரை மைசூரு, மண்டியா மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலைக்கு பிறகு வழக்கம்போல பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன.



Next Story