இயற்கை பேரிடரால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் இயற்கை பேரிடரால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இயற்கை பேரிடரால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர், ஒவ்வொரு பகுதியிலும் எந்த மாதிரியான இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஊராட்சி, வார்டு நிலையில் உள்ள அலுவலர்களுக்கு விளக்கிட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் நிலநடுக்கம், சுனாமி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாக்குப்பிடிக்க கூடிய வகையில் கட்டப்பட வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஆகியவற்றை தாக்குப்பிடிக்க கூடிய வகையில் முன்எச்சரிக்கையுடன் கட்டப்பட வேண்டும். மேலும் கட்டிடம் கட்டி கொடுக்கும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டம் நடத்தி, அவர்கள் கட்டும் கட்டிடம் இயற்கை இன்னல்களால் சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் கட்ட வேண்டும்.
ஆக்கிரமிப்புமழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் கட்டிடம் கட்ட வேண்டியிருந்தால் அதனை மேடுபடுத்திய பின்னர் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். நீர்நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதனை சமாளிப்பது தொடர்பாக பயிற்சி வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜையா, உதவி கலெக்டர்கள் அனிதா, கணேஷ்குமார், தாசில்தார் நெல்லை நாயகம் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.