சென்னிமலை அருகே 115 வயது மூதாட்டி மரணம்


சென்னிமலை அருகே 115 வயது மூதாட்டி மரணம்
x
தினத்தந்தி 1 July 2017 4:30 AM IST (Updated: 1 July 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே 115 வயதான மூதாட்டி மரணம் அடைந்தார். இவருக்கு 86 பேரன்–கொள்ளுப்பேரன் உள்ளனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது சொக்கநாதபாளையம். இங்கு நல்லசுழிகாடு என்ற இடத்தில் வசித்து வந்தவர் மாரப்ப நாடார். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 115). இவர்களுக்கு சென்னியம்மாள் (வயது 90), கண்ணம்மாள் (வயது 68) ஆகிய இரு மகள்களும், கன்னியப்ப நாடார் (வயது 75) என்ற மகனும் உள்ளனர்.

வள்ளியம்மாளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டனர். இவருடைய கணவர் மாரப்ப நாடார் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு வள்ளியம்மாள் பதனீர் காய்ச்சி விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

வள்ளியம்மாளின் 90 வயதுள்ள மூத்த மகள் சென்னியம்மாளுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் 6 பேருக்கும் திருமணம் ஆகி அவர்களின் வாரிசுகள் மற்றும் பேரன், பேத்திகளாக மொத்தம் 45 பேர் உள்ளனர். மூதாட்டி வள்ளியம்மாளின் மகன் கன்னியப்ப நாடாருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகளாக மொத்தம் 18பேர் உள்ளனர். கடைசி மகள் கண்ணம்மாளுக்கு 6 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி வாரிசுகளாக மொத்தம் 23 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

115 வயதை அடைந்த வள்ளியம்மாள் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம், கரைத்தோட்டம் என்ற இடத்தில் தனது பேரன்கள் மாரியப்பன் மற்றும் சேகர் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் வள்ளியம்மாள் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.

இதுகுறித்து வள்ளியம்மாளின் பேரன்கள் மாரியப்பன் மற்றும் சேகர் ஆகியோர் கூறுகையில், “பாட்டி எங்க வீட்டில் தான் இருந்து வந்தார். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவார். மட்டன், சிக்கன் உட்பட எல்லாவிதமான உணவுகளையும் சாப்பிடுவார். பற்கள் அனைத்தும் அப்படியே இருப்பதால் கரும்பு, முறுக்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார். கடந்த 3 மாதங்களாக உடல்நலம் மோசமாகி 115–வது வயதில் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்:“ என சோகத்துடன் கூறினார்கள்.

வள்ளியம்மாள் இறந்த தகவல் அறிந்து பல்வேறு ஊர்களில் வசித்து வந்த அவரது வாரிசுகள் சொக்கநாதபாளையத்தில் உள்ள கரைத்தோட்டத்துக்கு சென்று வள்ளியம்மாளின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்கள்.


Next Story