உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா  உஷாரு..
x
தினத்தந்தி 2 July 2017 9:00 AM IST (Updated: 1 July 2017 3:27 PM IST)
t-max-icont-min-icon

அவள் அழகானவள். அமைதியானவள். ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள். தந்தை இல்லை. ஆசிரியையாகவேண்டும் என்பது அவள் சிறுவயது கனவு. படித்து, தற்போது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைபார்த்துக்கொண்டிருக் கிறாள்.

வள் அழகானவள். அமைதியானவள். ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள். தந்தை இல்லை. ஆசிரியையாகவேண்டும் என்பது அவள் சிறுவயது கனவு. படித்து, தற்போது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைபார்த்துக்கொண்டிருக் கிறாள்.

அவளை பெண் கேட்டு வசதிபடைத்த ஒரு குடும்பத்தினர் வந்தனர். பேச்சு வார்த்தை நடந்தது. தங்கள் செல்வச் செழிப்பை பல விதங்களில் பறைசாற்றிய அவர்கள், முதல் கோரிக்கையாக ‘நிச்சயதார்த்தம் முடிந்ததும் பெண் வேலையை விட்டுவிடவேண்டும். வேலைக்கு செல்லும் பெண் எங்கள் மருமகள் என்றால், எங்கள் குடும்ப கவுரவத்திற்கு குறைச்சலாகி விடும்’ என்றார்கள்.

பெண்ணுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது. ‘ஆசிரியப் பணி என்பது வேலை அல்ல, சேவை. நான் எவ்வளவோ கனவு களோடு அந்த சேவையை செய்துகொண்டிருக்கிறேன். திருமணத்திற்காக வேலையை விடமாட்டேன்’ என்றாள். அதனால் திருமண பேச்சுவார்த்தை முறியும் நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்ணின் தாயார் மட்டும், ‘பெரிய இடம் கையைவிட்டு போய்விடும்போல் தெரிகிறதே!’ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்.

தாயின் மனஓட்டத்தை புரிந்துகொண்ட மாப்பிள்ளை பையனின் அம்மா, தாயார் மூலமே மகளை சரிகட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். எப்படியாவது அவளை தனது மருமகளாக்கிவிட வேண்டும் என்பதில் அந்த பெண்மணி குறியாக இருந்தாள். அவ்வப்போது விலைமதிப்புமிக்க காரில் வீடு தேடி வந்து, பெண்ணின் அம்மாவுடன் உறவை மேம்படுத்தி, அவளை திருமணத்திற்கு சம்மதிக்கவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். தனது மகனுக்கு பெண்களின் நட்போ, குடிப்பழக்கமோ கிடையவே கிடையாது என்றும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்.

எப்படியோ அவர், பெண்ணின் தாயார் மனதை கரைத்துவிட்டார். ‘ஆசிரியை வேலையை விட சொல்லுங்கள். பிற்காலத்தில் ஒரு பள்ளிக்கூடமே கட்டிக்கொடுக்கிறோம். அதை அவளே நடத்தட்டும்..’ என்று வாக்குறுதி கொடுத்தார். ஏகப்பட்ட சொத்துக்களுக்கு மகன் அதிபதி என்றும் சுட்டிக்காட்டினார்.

அதை கேட்டு உருகிப்போன தாயார், மகளின் மனதை கரைத்தார். ‘இவ்வளவு பெரிய இடத்தை தவறவிட்டால், அது நாம் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறாகிவிடும். வேலையை நீ விட்டுவிட்டு, திரு மணத்திற்கு சம்மதிக்கவேண்டும்’ என்று மகளிடம் கெஞ்சினார்.

அவள் அரைகுறை மனதோடு சம்மதித்தாள். பின்பு அவளை பார்க்க மாப்பிள்ளை இளைஞன் வந்தான். இருவரும் பார்த்தார்கள். அவன் கலராகவும், கம்பீரமாகவும் இருந்தான். அவனது ஒவ்வொரு அசைவிலும் பணக்கார கர்வம் தலைதூக்கி நின்றது. அவளிடம் தனியாக பேசவேண்டும் என்றான். அவளும் சம்மதித்தாள்.

தனியறையில் அமர்ந்தனர். அவளை பற்றி நிறைய கேட்ட அவன், பின்பு தன்னை பற்றி சொன்னான். ‘நீ அழகாக இருக் கிறாய். அதனால் உன்னை திருமணம் செய்துகொள்ள எனக்கு சம்மதம்தான். ஆனால் என் வாழ்க்கைமுறையை நீ புரிந்து கொள்ளவேண்டும். எனக்கு நிறைய தோழிகள் உண்டு. அவர்களோடு பொழுதை கழிப்பேன். பயணங்கள் செல்வேன். அவர்
களோடு சேர்ந்து குடிப்பேன். எனது அப்பாவின் நிறுவனத்தில் எனக்கு ஒரு பதவி கொடுத்திருக்கிறார்கள். அந்த பதவிக்கான சம்பளமாக எனக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதை நானே செலவு செய்துவிட்டு, அம்மாவிடமும் ஆயிரக்கணக்கில் வாங்கிக்கொள்வேன். நான் அனுபவிக்க பிறந்தவன். அதற்கு நீ எந்த விதத்திலும் தடை போடக்கூடாது’ என்றான்.

அவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் லேசாக புன்னகைத்தாள். உடனே தனது விலை உயர்ந்த செல் போனில் தோழிகளோடு பதிவு செய்துவைத்திருந்த படங்களையும் அவளுக்கு காட்டினான். அவனது செல்போனை வாங்கி, தனது கையிலே வைத்துக்கொண்டு, அவள் ‘வாருங்கள்.. செல்வோம்..’ என்றபடி, அவன் பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியே வந்தாள். அனைவரும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள்.

அவனது செல்போனையும், தனது செல்போனையும் அவனது அம்மா முன்னால் வைத்தாள். எல்லோரும் செல்போன் களையே பார்க்க, ‘நாங்க இரண்டு பேரும் பேசிக்கொண்டதை நீங்களும் கேட்கலாம்’ என்றபடி, தனது  செல்போனை முதலில் ‘ஆன்’ செய்தாள்.

தனியறையில் அவன் சொன்னது அனைத்தும் அதில் பதிவாகியிருந்தது. அதை கேட்டு அவனது தாயார் வியர்த்து வழிந்தார். ‘இதுதான் உங்க பையனின் யோக்கியதை. இதுக்கு மேலும் தெரிஞ்சுக்க இந்தாங்க அவரோட செல்போன். பெண்களோடு லூட்டி அடிக்கிற படங்களை எனக்கு காட்டினார்.  நீங்களும் பாருங்கள்..’ என்றபடி அவனது செல்போனை, அவனது அம்மாவிடம் கொடுத்தாள்.

வரன் வீட்டார் அனைவரும் வெட்கி தலைகுனிந்து வெளியேறினார்கள்!

வசதிபடைத்த வீட்டு வாலிபர்கள் சிலர் திருமணத்திற்கு பிறகும் தங்கள் ‘பழைய ஜாலி’ வாழ்க்கையை தொடர விரும்பு கிறார்கள். அதற்காக வசதி குறைந்த இடத்து அழகான பெண்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். தங்கள் பழைய லூட்டி தொடர, பெண் பார்க்கும் நாளிலே ஓப்பனாக பேசி பெண்ணிடம் சம்மதம் வாங்கவும் முயற்சிக்கிறார்கள். அதற்கு சில இளைஞர்களின் அம்மாக்களும் ஒத்துழைக்கிறார்கள்.

– உஷாரு வரும்.

Next Story