போராடி வெல்லலாம் புற்றுநோயை!


போராடி வெல்லலாம் புற்றுநோயை!
x
தினத்தந்தி 2 July 2017 8:30 AM IST (Updated: 1 July 2017 4:19 PM IST)
t-max-icont-min-icon

புஷ்பா ஆண்டனி, மார்பக புற்றுநோய்க்கு எதிராக மனம் தளராமல் போராடி அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பெண்மணி. 51 வயதான இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்.

புஷ்பா ஆண்டனி, மார்பக புற்றுநோய்க்கு எதிராக மனம் தளராமல் போராடி அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பெண்மணி.  51 வயதான இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள ரப்பர் எஸ்டேட்டில் கணவர், மகன், மகளுடன் வசித்து வந்தவர் அந்த தொழில் மூலம் குடும்ப செலவுகளை சமாளித்து வந்திருக்கிறார்.

2007–ம் ஆண்டில் பெய்த கன மழை அவருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. குடியிருந்த வீடு சூறைக்காற்றுக்கு இலக்காகி கடும் சேதமடைந்திருக்கிறது. அதனை பழுது பார்த்தபின்பும் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழல் நிலவி இருக்கிறது. புதிய வீடு கட்டினால்தான் தொடர்ந்து அங்கு குடியிருக்க முடியும் என்ற நிலையில் சகோதரி வீட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். அப்போது நெருங்கிய தோழி ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் வி‌ஷயம் தெரியவந்திருக்கிறது. அந்த தோழி தான் அனுபவிக்கும் வேதனையை விவரித்திருக்கிறார். அதை கேட்டதும் புஷ்பா ஆண்டனிக்குள் பயம் தொற்றிக்கொண்டிருக்கிறது. காரணம், அவருக்கும் மார்பகத்தில் சிறு கட்டி ஒன்று இருந்திருக்கிறது.

தனக்கும் மார்பக புற்றுநோய் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் மருத்துவமனையை நாடியிருக்கிறார். முதலில் சாதாரண கட்டியாக இருக்கும் என்ற ரீதியிலேயே மருத்துவ சிகிச்சை எடுத்திருக்கிறார். ஒரு மாத காலம் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்ட பிறகும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கட்டி அப்படியே இருந்ததால் பதற்றத்துடன் புற்றுநோய் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். அங்கு பரிசோதனையில் புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதை கேட்டதும் புஷ்பா அதிர்ந்து போய்விட்டார்.

 தன்னையும் புற்றுநோய் ஆட்கொண்டு விட்டதே என்ற கவலை புஷ்பாவை வெகுவாக வாட்டி வதைத்திருக்கிறது. அப்போது அவருடைய மகன் 10–ம் வகுப்பும், மகள் 3–ம் வகுப்பும் படித்து கொண்டிருந்திருக்கிறார்கள். பிள்ளைகளை எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற வேதனையில் உழன்றவர் எப்படியாவது புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். புற்றுநோயின் ஆரம்ப கட்டமாக இருந்ததால் எப்படியாவது குணப்படுத்திவிடலாம் என்ற தன்னம்பிக்கை அவருக்குள் துளிர்விட்டிருக்கிறது.

‘‘நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதற்கு புற்றுநோய் மட்டுமே காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எது நடக்கவேண்டுமோ அது நிச்சயம் நடந்தே தீரும். அதை கண்டு பயப்படுவதற்கு பதிலாக கடவுள் மற்றும் மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்து சூழ்நிலையை தைரியமாக எதிர்கொள்ள தீர்மானித்தேன்” என்கிறார்.

 புஷ்பா, புற்றுநோய் மருத்துவர்கள் பலரை சந்தித்து நோயின் தாக்கம் குறித்தும், சிகிச்சை நிலவரம் குறித்தும் கேட்டறிந்திருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் தங்கி இருந்து தொடர் சிகிச்சை பெற்றிருக்கிறார். அங்கு தன்னை போல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பெண்கள் பலரையும் சந்தித்து இருக்கிறார். அவர் களெல்லாம் மன அழுத்தத்திற்குள்ளாகி மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமைச் சூழலில் இருந்திருக்கிறார்கள். அவர் களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அங்கு ஒரு பெண்ணுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்திருக்கிறது. அறிகுறிகள் இருப்பது தெரிந்திருந்தும் அலட்சியமாக இருந்ததால் நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றிருக்கிறார்கள். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் போதிய அளவு இல்லாததே இந்த நிலைக்கு காரணம் என்பதை புஷ்பா உணர்ந்திருக்கிறார். விழிப்புணர்வை உருவாக்குவதை தனது கடமையாக கருதி செயல்பட முன்வந்திருக்கிறார். கூடவே தானும் தொய்வடையாமல் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். தொடர் சிகிச்சைகள் பலன் கொடுக்க, ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு புற்றுநோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்திருக்கிறார்.   

 இப்போது ஆரோக்கியமானவராக அன்றாட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ரப்பர் தொழில், ஆடு வளர்ப்பு, காய்கறி தோட்ட பராமரிப்பு என பிசியாக சுழன்று கொண்டிருக்கிறார். தன்னை போல் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மார்பக புற்றுநோய் குறித்தும், அதற்கான மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்களில் பங்கு கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து, ‘இது குணப்படுத்தக்கூடியநோய். இதில் இருந்து மீண்டு வர முடியும்’ என்று தன்னம்பிக்கையூட்டி கொண்டிருக்கிறார். 

Next Story