தொழில் நிறுவனங்களில் 25 சதவீத மாணவர்களே வேலை வாய்ப்பு பெறுகின்றனர்
பட்டம் பெறுவோரில் 25 சதவீத மாணவர்களே தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா கூறினார். திறன் வளர்ப்பு பயிற்சி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இளைஞர்களுக்கான கடல் சார்ந்த பாதுகாப்பு வர
காரைக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இளைஞர்களுக்கான கடல் சார்ந்த பாதுகாப்பு வர்ணங்கள் பூச்சுகள் பற்றிய திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் காரைக்குடியில் காரிய அமில மின்கலங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பாதுகாப்பும், பராமரிப்பும் பற்றிய பயிற்சியும் நடைபெற்றது. இந்த பயிற்சிகளின் நிறைவு விழா காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில்(சிக்ரி) உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும்போது, மின்சார, மின்னணு கருவிகள் இயக்குவது, சிறிய பழுதினை சரிசெய்வது போன்றவற்றில் மேல் நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்களின் திறன் மிகவும் குறைந்து இருக்கிறது. இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதும், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுமே இதுபோன்ற திறன் வளர்ப்பு பயிற்சிகளின் குறிக்கோளாகும் என்றார்.
பின்னர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா பேசும்போது, பட்டம் முடித்து வெளியே வரும் மாணவர்களில் 25 சதவீதம் பேரே முறைசார்ந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். இந்த வகையில் 2024–ம் ஆண்டில் 24 வகை திறன் பிரிவுகளில் பணிபுரிய 10 லட்சம் திறன் மிகு இளைஞர்கள் தேவைப்படுவார்கள். இதனை பூர்த்தி செய்யவும், ஈடுகட்டும் வகையில் தான் இத்தகைய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய திறன் வளர்ப்பு பயிற்சிகள் மூலம் தனிநபர் வேலை தேடி அலையும் நிலை மாறி, அவர்களை தேடி வேலைவாய்ப்புகள் வரக்கூடிய சூழல் உருவாகும் என்றார். முன்னதாக திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெற்ற இளைஞர்களை பாராட்டினார்.
பின்னர் சிக்ரி இயக்குனர் விஜயமோகனன், அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா ஆகியோர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த விழாவில் மூத்த விஞ்ஞானிகள் வேலாயுதம், பார்த்திபன், சத்தியநாராயணன், ராஜேந்திரன், கே.எல்.என். கல்லூரி முதல்வர் ராம்பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.