வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு
கூடலூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பள்ளிக்கூட மாணவர் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவாலா அருகே மூச்சுக்குன்னு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் குணசேகரன் (வயது 17). இவர் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குணசேகரன் வீட்டில் தரையில் படுத்து தூங்கினார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் புரண்டு படுக்கும் போது குணசேகரன் கழுத்தில் ஏதோ ஒன்று கடித்தது.
இதனால் வலியால் அலறியவாறு குணசேகரன் எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் எழுந்து ஓடி வந்தனர். அப்போது அவரது தலையணை அருகே பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது. இதனால் குணசேகரனை பாம்பு கடித்து இருப்பதை அவரது பெற்றோர் உறுதி செய்தனர். பின்னர் சுமார் 1½ அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டு வீரியன் பாம்பு அடித்து கொல்லப்பட்டது.
இதற்கிடையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குணசேகரன் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அடித்து கொல்லப்பட்ட பாம்பையும் குணசேகரனின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு குணசேகரன் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் நடுவட்டம் பகுதியில் செல்லும் போது குணசேகரன் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர். இது தொடர்பாக தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.