திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.40½ கோடி நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40½ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வசதியாக தனி மனிதர்களை போல மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா மோட்டார் சைக்கிள்கள் கடந்த 5 ஆண்டுகளில் 205 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை 5 ஆயிரத்து 81 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியே 27 லட்சத்து 64 ஆயிரம், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகையாக 130 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 24 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்குவதற்காக 265 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 21 ஆயிரத்து 600 மதிப்பில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் மற்றும் சுயதொழில் புரியும் காதுகேளாத 381 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 22 ஆயிரத்து 710 மதிப்பில் காதொலி கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 199 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று மொத்தம் ரூ.40 கோடியே 45 லட்சத்து 34 ஆயிரத்து 10 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.