நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
அனகாபுத்தூரில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு தையல் தொழிலாளி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த அனகாபுத்தூர், தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் விநாயகம் (வயது 47). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா (43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் ரூபிணி (20) என்ற மகள் மட்டும் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
விநாயகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேலை செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே குடும்ப செலவுக்காக பிரேமா, கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட விநாயகம், மனைவிக்கு வேறு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதும், மகள் ரூபிணி, பெற்றோரை சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விநாயகம், இரும்பு கம்பியால் பிரேமாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனால் பயந்து போன விநாயகம், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் பிரேமா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் நேற்று முன்தினம் கணவன்–மனைவிக்குள் தகராறு நடந்தது குறித்து அவர்களது மகள் ரூபிணிக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ரூபிணி, தாய் வீட்டுக்கு சென்று பார்த்த போது, அங்கு பிரேமா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விநாயகம் அவரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து இருப்பது தெரிந்தது. தாயின் உடலை பார்த்து ரூபிணி கதறி அழுதார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் விமலன், சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகம் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துக்கொலை செய்தாரா? அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விநாயகத்தின் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய விநாயகத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.