தேனி அருகே தொழிலாளி வீட்டில் சமையல் செய்த சாதம் சிவப்பாக மாறியதால் பீதி


தேனி அருகே தொழிலாளி வீட்டில் சமையல் செய்த சாதம் சிவப்பாக மாறியதால் பீதி
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே தொழிலாளி வீட்டில் சமையல் செய்த சாதம் சிவப்பு நிறத்தில் மாறியதால் பீதி அடைந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி,

தேனி அருகே உள்ள சங்ககோணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி. இவர் வீட்டில் சமைக்கும் அரிசி சமைத்து முடித்த பிறகு வெள்ளை நிறத்தில் இருக்கும் சாதம், சுமார் 4 மணி நேரம் கடந்த பின்பு சிவப்பு நிறத்திற்கு மாறுவதாக கூறப்படுகிறது.

இதனை அவர் தனது ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது, யாரோ செய்வினை வைத்து இருக்கலாம் என்று கூறி ஊரில் பீதி ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு பூங்கொடி சமைத்து வைத்து இருந்த சாதம் சிவப்பு நிறத்தில் மாறி இருந்ததை பார்வையிட்டனர். பின்னர், அங்கிருந்து சாதத்தின் மாதிரி மற்றும் அரிசி மாதிரியை எடுத்தனர். இதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த அரிசியை தேனியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாக கூறினர். அதன்பேரில், சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் சாதத்தின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சாதம் சிவப்பாக மாறியது குறித்து பூங்கொடி கூறுகையில், ‘கடந்த 26–ந்தேதி வீட்டில் சமைத்து விட்டு, ஒரு திருமண வீட்டுக்கு சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்த போது சாதம் சிவப்பு நிறமாக மாறி இருந்தது. யாரோ வி‌ஷம் கலந்து வைத்து விட்டார்களோ என்று நினைத்து அதனை குழி தோண்டி புதைத்து விட்டேன். மீண்டும் சமையல் செய்த போது வெள்ளை நிறத்தில் சாதம் இருந்தது. ஆனால், 4 மணி நேரம் கழித்து அந்த சாதம் சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியது. இதனால், யாரேனும் செய்வினை வைத்து விட்டார்களா என்று பயந்து விட்டோம். இந்த சாதத்தை சாப்பிட்டதால் கடந்த 3 நாட்களாக மந்தமாக உள்ளது. வயிற்று வலி ஏற்பட்டு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டோம்’ என்றார்.


Next Story