குட்கா விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகளின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுகிறது


குட்கா விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகளின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுகிறது
x
தினத்தந்தி 2 July 2017 5:00 AM IST (Updated: 2 July 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்சி தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள்விழா மற்றும் சட்டசபை வைர விழா பொதுக்கூட்டம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது. நகர செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, நகர அவைத் தலைவர் பதிவுஜமால், ஒன்றிய அவைத் தலைவர்கள் மிசா.நடராஜன், பாலகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பாலவிநாயகம், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வடிவு அண்ணாமலை ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினர். ஆ.ராசா பேசும் போது கூறியதாவது:-

கலைஞர் எதை செய்தாலும் வரலாறு பேசும் வகையிலே செய்து வந்துள்ளார் குறிப்பாக அனைவரும் அர்ச்சகராவது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, அனைத்து தரப்பினரும் உயர் படிப்பு படிப்பதற்கு வழிவகை செய்தது, உடல் ஊனமுற்றோர்களை மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் மாற்றியது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, தமிழை செம்மொழியாக்கியது என்று கூறிக்கொண்டே போகலாம்.

தற்போது மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்த இந்தி மொழி 400 ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்து வந்தது என்றே தெரியாது. கடன் வாங்கப்பட்ட இந்தி மொழி, சமஸ்கிருதம், உருது, இந்துஸ்தானி ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமான வார்த்தைகள் சேர்ந்து தான் உருவானது. எனவே தான் இந்த மொழிக்கு வரலாறு கிடையாது. அந்த மொழியை தமிழகத்தில் திணிக்க விடமாட்டோம். மீறி முயன்றால் எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

தமிழக சட்டமன்றம் 232 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று சட்டத்தை நிறைவேற்றுகிறது. இந்த மண்ணில் தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் சமூக நீதி அடிப்படையில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமெனில் நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னது சட்டமன்றம். ஆனால் நிறைவேற்றப்பட்ட சட்டம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் மத்திய அரசுக்கு தமிழக அரசு காதல் கடிதம் எழுதியது போல் ஆகிவிட்டது. இதன் விளைவு இந்த வருடம் தமிழகத்தில் 1,190 மதிப்பெண் எடுத்த பலரும் டாக்டர் சீட் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வை ரத்துசெய்தால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தருவோம் என்று கூற இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?. குட்கா விஷயத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் உதயசூரியன், கனகராஜ், மகளிரணி சுமதி ராமமூர்த்தி, இளைஞரணி தனுஷ்குமார், விவசாயஅணி ஞானராஜ், மீனவரணி நவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

Next Story