ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததால் சேலம் ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்ந்தது


ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததால் சேலம் ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 2 July 2017 4:15 AM IST (Updated: 2 July 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததால் சேலம் ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்ந்தது.

சேலம்,

நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு–சேவை வரி அமலுக்கு வந்தது. இந்த ஒரே வரிவிதிப்பால் ஓட்டல்கள், பேக்கரிகள் ஆகியவற்றில் சாப்பாடு மற்றும் தின்பண்டங்களின் விலை உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளிலும் விலை உயர்ந்தது.

ஏ.சி. இல்லாத உணவகங்களில் காபி, டீ, இட்லி, தோசை, பூரி, பொங்கல், சாப்பாடு, மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட அனைத்து வகை உணவுகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாட் வரி மட்டும் பில்லுடன் சேர்க்கப்பட்டிருந்தது. நேற்று முதல் மாநில ஜி.எஸ்.டி. 6 சதவீதமும், மத்திய ஜி.எஸ்.டி. 6 சதவீதமும் என இரண்டும் ஒரே பில்லில் சேர்க்கப்பட்டது. அதனால் இதுவரை ரூ.14–க்கும் விற்கப்பட்ட காபி, டீ 15 ரூபாய் 26 காசு என்றும், ரூ.56–க்கு விக்கப்பட்ட 4 இட்லி ரூ.63–க்கும், ரூ.75–க்கு விற்பனையான சாப்பாடு 81 ரூபாய் 75 காசுக்கும் விற்கப்பட்டது.

ஏ.சி. ஓட்டல்களில் அனைத்து உணவுக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதுபோல ஐஸ்கிரீம் பார்லர், பேக்கரி போன்றவற்றுக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதுவரை ரூ.20–க்கும் விற்கப்பட்ட ஐஸ்கிரீம் 23 ரூபாய் 75 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல இனிப்பு தின்பண்டங்களுக்கு 5 சதவீதமும், கார வகைகளுக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி. போடப்பட்டது. அதனால் அதன் விலைகளும் அதிகரித்தது. மேலும் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ்களின் விலையும் 10 சதவீதம் உயர்ந்தது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் ஓட்டல்களில் உணவு விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் ஜி.எஸ்.டி. குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் வழக்கம்போல விற்பனை நடக்கும். தற்போது விலை ஏற்றத்தை கண்டு சாப்பிட வந்த சிலர் எழுந்தும் செல்கிறார்கள். சிலர், தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, ஓட்டல்களில் உணவுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்‘‘ என்றார்.


Related Tags :
Next Story