சமுத்திரம் ஏரி தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


சமுத்திரம் ஏரி தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 July 2017 4:00 AM IST (Updated: 2 July 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

சமுத்திரம் ஏரி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை-நாகை சாலையில் ஞானம்நகர் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. அந்த காலத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட இந்த ஏரி இன்றைக்கு 242 ஏக்கர் பரப்பளவாக குறைந்துவிட்டது. இந்த ஏரி நிரம்பினால் ஆண்டுதோறும் அந்த பகுதியில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாதநிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதுடன் மணல் திட்டுகளும் உருவாகியுள்ளன. மேலும் ஆங்காங்கே ஏரியை ஆக்கிரமித்து வருவதால் ஏரியின் பரப்பளவு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது.ஏரியை ஆழப்படுத்தி படகு போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஏரியை பராமரிக்கவில்லை என்றால் ஏரி இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போய்விடும்.

விவசாயிகள் கருத்து

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

சமுத்திரம் ஏரி நிரம்பினால் அந்த தண்ணீரை பயன்படுத்தி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிகளும் செய்ய முடியும். ஆனால் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அதன் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. ஏரிக்கரையில் சிறுவர்களுக்கான பூங்கா அமைத்து, 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைப்பதுடன் படகுசவாரி வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ.1½ கோடியில் திட்டம் தீட்டப்பட்டு பூமிபூஜையும் 2012-ம் ஆண்டு போடப்பட்டது. தொடக்கத்தில் வேகமாக தொடங்கிய இந்த பணி பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

ஏரியில் மணல் தேங்கி மேடாக காணப்படுகிறது. செடி, கொடிகள் எல்லாம் வளர்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் லாரிகளில் கழிவுநீர் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளம், ஏரிகளில் இருந்து மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படி மணல் அள்ளுவதால் குளம், ஏரி ஆழப்படுத்தப்படுவதுடன், தண்ணீர் தேங்கும் பரப்பளவும் அதிகரிக்கும். இந்தநிலையில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். அதன்படி சமுத்திரம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story