கடும் வறட்சியால் கருகும் தென்னை மரங்கள் விவசாயிகள் கவலை


கடும் வறட்சியால் கருகும் தென்னை மரங்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 July 2017 3:45 AM IST (Updated: 2 July 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கடும் வறட்சியால் தென்னை மரங்கள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியில் வழக்கமாக நடைபெறும் ஒருபோக சம்பா சாகுபடியும் நடைபெறவில்லை. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கடைமடையில் பருவமழை பொய்த்து போய்விட்டது. மழையின்றி விவசாயம் கைவிட்டு போன நிலையில் தென்னை சாகுபடியை மட்டுமே தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் முழுமையாக மழை பொய்த்து போனதால் இந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 200 அடிக்கும் கீழ் சென்று விட்டது. ஒருசில ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் வறண்டு விட்டது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் தஞ்சை மாவட்ட விவசாயிகளை மழை ஏமாற்றிவிட்டது. மேலும் வெயிலின் தாக்கம் அக்கினி நட்சத்திரம் போல உள்ளது. இதனால் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடும் வறட்சியால் தற்போது போதுமான அளவு தென்னைமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் தென்னை மரங்கள் கருகி உள்ளன. எனவே விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பலத்த மழை பெய்தால் மட்டுமே தென்னை மரங்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தஞ்சை மாவட்ட விவசாயிகள் தென்னை சாகுபடியை காப்பாற்ற மழையை எதிர்பார்த்துள்ளனர்.


Related Tags :
Next Story