குப்பைகளை பொது இடத்தில் போடாமல் குப்பை தொட்டிகளில் போட வேண்டும்
குப்பைகளை பொது இடத்தில் போடாமல் குப்பை தொட்டிகளில் போட வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை,
குப்பைகளை பொது இடத்தில் போடாமல் குப்பை தொட்டிகளில் போட வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மேற்கு கோபுர பின்புறம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நேற்று மலையேறும் பாதையை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி, தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி மற்றும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அப்போது பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை மலைப்பகுதியில் பயன்படுத்தக் கூடாது என்பதற்கும், குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்பதற்கும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மலைப்பகுதியை ஏற்கனவே இருக்கும் இயற்கையான நிலைக்கு மாற்றுவதற்காக தொடர்ந்து இந்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த மாதம் முதல் மலைப்பகுதியில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். இந்த மாதிரி முயற்சி ஒவ்வொரு மாதமும் முதலாவது சனிக்கிழமை தோறும் நடைபெறும்.ஏற்கனவே, தூய்மை திருவண்ணாமலை திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், குப்பைகளை பொது இடத்தில் போடாமல் குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தை தூய்மையாக வைத்து கொள்வோம் என்று கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இதில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், நகரநல அலுவலர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.