தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்தார்
தந்தை இறந்த சோகம் தாங்க முடியாமல், தனியார் மருத்துவமனையின் 4–வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). தோல் நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல் நிலை மிகவும் மோசம் ஆனதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஆறுமுகத்தின் 2–வது மகன் பிரேம்கணேஷ் (33). இவர், என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர், மருத்துவமனையில் தங்கி, தந்தையை கவனித்து வந்தார். நேற்று அதிகாலை ஆறுமுகம், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து விட்டதாக பிரேம்கணேஷிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மாயமானார்அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வீட்டுக்கு போன் செய்து, தந்தை இறந்த தகவலை தெரிவித்தார். உடனடியாக பிரேம்கணேஷின் அண்ணன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அங்கு பிரேம்கணேஷ் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மருத்துவமனை முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது.
பிணமாக கிடந்தார்இதையடுத்து ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டு இருந்த 3–வது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது, 2–வது மாடியின் ஜன்னல் மேல் உள்ள சிலாப்பின் மீது பிரேம்கணேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் பிரேம்கணேஷை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரேம்கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலைஇது குறித்து தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், பிரேம்கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். தந்தை ஆறுமுகத்தின் மீது பிரேம்கணேஷ் மிகுந்த பாசம் வைத்து இருந்தார். தந்தை–மகன் போல் இல்லாமல் இருவரும் நண்பர்களை போல் இருந்து வந்து உள்ளனர்.
இந்தநிலையில் தந்தை ஆறுமுகம் இறந்து விட்டதால், அந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறிய பிரேம்கணேஷ், தனது குடும்பத்தாருக்கு போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த மருத்துவமனையின் 4–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.